முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரிகள் வேலைநிறுத்தம்:திட்டமிட்டபடி தொடங்கியது : பல ஆயிரம் மதிப்பிலான சரக்குகள் தேக்கம்

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      வர்த்தகம்
Image Unavailable

சென்னை  - தென் இந்தியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலைநிறுத்தம் நேற்று முதல்  தொடங்கியது.  30 லட்சம் லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.

ஸ்டிரைக் தொடங்கியது
வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கவும் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற ஸ்டிரைகை அறிவித்தனர். மத்திய, மாநில அரசுகள் வரி விதிப்பை வாபஸ் பெறக்கோரி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய 6 மாநிலங்களில் நேற்று காலை 6 மணி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது.

சரக்குகள் தேக்கம்
தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் 4.25 லட்சம் லாரிகள் நேற்று ஓடவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. வேலை நிறுத்தம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகள் எதுவும் வரவில்லை. அதுபோல தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும் லாரிகள் இயக்கப்படாததால் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. அரிசி, பருப்பு, எண்ணை, கோழி திவணங்கள், முட்டைகள், மஞ்சள், உள்ளிட்டவை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேங்கியுள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.1500 கோடி சரக்குகள் தேங்கியுள்ளன.

ரூ.1000 கோடி இழப்பு
இந்த ஸ்டிரைக் காரணமாக தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 கோடியும், 6 மாநிலங்களிலும் சேர்த்து ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 4500 லாரிகள் நேற்று காலை 6 மணி முதல் ஓடவில்லை. ஸ்டிரைக் காரணமாக லாரிகள் உக்கடம் லாரி பேட்டை, வடகோவை ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவையில் இருந்து வெளியூருக்கு செல்ல வேண்டிய எந்த லாரியும் இயக்கப்படவில்லை. தொழில் நகரமான திருப்பூரில் லாரிகள் ஸ்டிரைக்கால் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

திருப்பூர் - நீலகிரியில் ...
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் மூலம் தான் திருப்பூரில் இருந்து பனியன்கள் சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், கொச்சின் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது லாரிகள் ஸ்டிரைக் காரணமாக பனியன் அனுப்புவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுமார் 1500 லாரிகள் இயங்கி வருகின்றன. நடைபெறும் போராட்டத்தில் 1500 லாரி உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மஞ்சள், ஜவுளி, எண்ணை வித்துக்கள், இரும்பு பொருட்கள் போன்ற பொருட்களை ஏற்றி கொண்டு தினமும் 3500 லாரிகள் செல்கின்றன.

ஈரோடு - திண்டுகல்லில்...
மேலும் 3500 லாரிகள் ஈரோடு மாவட்டத்துக்குள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிலத்துக்கு செல்லும் 3500 லாரிகளும் நேற்று முன்தினம் இரவு முதலே நிறுத்தப்பட்டு விட்டன. ஈரோடு மாவட்டத்துக்குள் ஒடும் லாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் ஓடவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் 3000 லாரிகள் ஓடவில்லை. இதனால் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் சின்ன வெங்காயம் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக வர்ததக நகரமான ஒட்டன் சத்திரம் காய்கறி மார்க்கெட் வெறிச் சோடியது.

நெல்லை - மதுரையில் ...
நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள டிப்பர் லாரிகள், டேங்கர் லாரிகள் உள்பட 4700 லாரிகள் ஓடவில்லை. பெரும்பாலான மினி லாரிகளும் நேற்று ஓடவில்லை. ஒரு சில மினி லாரிகள் மட்டும் உள்ளூர் பகுதிகளில் ஓடியது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஓட வில்லை. தூத்துக்குடி துறைமுகத்தில் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. துறைமுகம் அருகே ஆயிரக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரம் லாரிகள் இயங்கி வருகிறது. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அனைத்து லாரிகளும் இயக்கப்படவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.2.5 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பொருட்கள் தேக்கம்
இது குறித்து மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தமிழ்நாடு தலைவர் குமாரசாமி கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள நான்கரை லட்சம் லாரிகள் உள்பட தென் மாநிலங்களில் உள்ள 30 லட்சம் லாரிகளும் ஓட வில்லை. இந்த லாரிகள் அனைத்தும் ஆங்காங்கு செட்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த போரட்டத்தால் தமிழகம் முழுவதும் தினமும் ரூ.1500 கோடி மதிப்பிலான பொருட்கள் உள்பட தென் மாநிலங்களில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் பரிமாற்றம் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 200 கோடி ரூபாயும், 6 மாநிலங்களிலும் சேர்த்து லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

தொடரும் போராட்டம்
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள், மஞ்சள், உணவு பொருட்கள், துணி வகைள் உள்பட ஏராளமான பொருட்கள் தேங்கி உள்ளன. தமிழகத்தில் லாரி தொழிலை நம்பி உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதற்கிடையே நேற்று  மதியம் எங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. எங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று மாலை தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்