முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை: லாரி ஸ்டிரைக் முடிவுக்கு வருமா ?

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      வர்த்தகம்
Image Unavailable

சென்னை  - லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக டெல்லியில் இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தையில் லாரி உரிமையாளர்களுடன் உடன்பாடு ஏற்பாட்டால் 8 நாட்களாக நீடித்து வரும் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி உயர்வு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும், பழைய வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் கடந்த 30-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சரக்குகள் தேக்கம்
லாரிகள் ஓடாததால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும் சரக்கு போக்குவரத்து தடைபட்டு உள்ளது. இதனால் ஆங்காங்கே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கி உள்ளன. வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, தமிழக லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு உரிய முடிவு எடுக்கும் என அமைச்சர் உறுதி அளித்தார். 
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், இதுகுறித்து தமிழக அரசுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இருப்பினும் வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது. இந்நிலையில், லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு டெல்லியில் இன்று பேச்சு நடத்துகிறது. அப்போது, வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. லாரி உரிமையாளர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்துவிட்டால் வேலைநிறுத்த போராட்டம் ஒரு முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்