முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

Source: provided

கத்திரி வெயில் காலமாகையால் தகிக்கும் வெப்பத்தில் வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோய்கள் அதிகம். உடலின் எந்தப் பகுதியில் அதிக அளவில் சூரிய ஒளி படுகிறதோ அந்த இடத்தில் நோய் வரும். அதிக அளவிலான சூரியக்கதிர்கள் உடலில்படுவதால் தோல் சிவந்து, தடித்து கருகுவதுடன், தோலில் சுருக்கங்கள் தோன்றி கட்டிகளும் ஏற்படுகின்றன

இதற்குக்காரணம் சூரியக்கதிர்களில் உள்ள புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதினால்தான் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே காலை பத்துமணிமுதல் மாலை நான்கு மணி வரை உள்ள வெயிலில் புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் இந்த நேரத்தில் வெயிலில் செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

அல்ட்ரா வயலட் கதிர்கள் :  சூரிய ஒளியில் உள்ள, மனிதரின் கண்களுக்கு புலப்படாத ‘அல்ட்ரா வயலட்’ கதிர்கள் தான் உடலில் வைட்டமின் ‘டி’ உண்டாக உதவுகிறது. இதனால் தான் காலை வெய்யில் உடலுக்கு நல்லது என்கிறார்கள். இருப்பினும் தோல் பாதிப்பிற்கு காரணம் இந்த கதிர்கள்தான். அதிக அளவில், அல்ட்ரா – வயலெட் கதிர்கள் தாக்கினால் உடலின் மரபணுக்கள் பாதிக்கப்பட்டு, தோல் திசுக்கள் உற்பத்தி செய்யும் இராசயன பொருட்கள் மாறுபடுகின்றன.

இந்த அல்ட்ரா வயலெட் கதிர்கள் ஃபோலிக் அமிலத்தை சிதைத்து அதன் குறைவை எற்படுத்துகின்றன. சூரிய ஒளியின் பாதிப்பை குறைக்க சருமம் சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சருமத்தின் மேல்பகுதி கடினமாகி யு.வி. கதிர்கள் ஊடுருவாமல் தடுக்கின்றது. ‘மெலானின்’ (தோல் நிறத்தை கொடுக்கும் பொருள்) உற்பத்தி அதிகமாவதால் தோலின் நிறமும் அதிக கருமையாகிறது.

தோல் புற்றுநோய் : ஒருவருடைய தோலின் நிறத்துக்குக் காரணமான திகழ்வது மெலானின் எனப்படும் நிறச்சத்து. இதற்கு சூரிய ஒளியைத் தடுத்து தோல் புற்றுநோய் வராமல் காக்கும் சக்தி அதிகம். அதனால், கறுப்பு தோல் இருப்பவர்களுக்கு தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால், வெள்ளைத் தோல் இருப்பவர்களுக்கு, தோலில் மெலானின் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு சூரிய ஒளியால் உண்டாகும் தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மருத்துவர்கள் ஆலோசனை : வெயில் காலத்தில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால், உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அப்போது தண்ணீர் குடிக்காமல் விட்டால் கிட்னியில் கல், சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னை, தோல் உலர்ந்து போதல் போன்ற பிரச்னைகள் தோன்றும். அதிகம் தண்ணீர் குடிப்பது, பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்து கொள்வது ஆகியவற்றின் மூலம் தோல் பளபளப்பாக இருப்பதுடன் கோடையால் உடலில் உருவாகும் பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்கலாம்.

வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவைகளையும் தினமும் சேர்த்துக் கொள்ளவும். முள்ளங்கி, புடலங்காய், பூசணி உள்ளிட்ட நீர்க்காய்களை சமையலில் சேர்ப்பதன் மூலம் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதைத் தடுக்க முடியும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிட்ரஸ் உள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழ வகைகள் அவசியம் சாப்பிடவும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். எண்ணெயில் பொறித்த ஸ்னாக்ஸ் வகைகளுக்கு பதிலாக ஏதாவது ஒரு பழ வகை எடுத்துக் கொள்வது நல்லது.

சத்தான உணவு உண்ணலாம் : சூரியனின் புற ஊதா கதிர்கள் நேரடியாக படுவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க சன்ஸ்கிரீன் லோஷன் உதவும். முகம் மற்றும் தோல்பகுதியில் படியும் தூசியினால் முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை ஏற்படலாம். நேரம் கிடைக்கும் போது முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவவேண்டும். காலையும் மாலையும் கஷ்டம் பார்க்காமல் குளித்து விட வேண்டும். உதடுகளில் ஏற்படும் தோல் வறட்சியை தடுக்க பழத்தால் உருவாக்கப்பட்ட லிப் கிரீம்கள் பயன்படுத்தலாம். மேலும் காட்டன் டிரஸ் கொஞ்சம் லூசாக இருக்கும்படி அணியவும்.

மைல்டான பெர்ப்யூம் துணையுடன் சத்தான உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். கடுமையான வெயிலில் மஞ்சள் பூசிச் செல்வது, தலைமுடிக்கு சாயம் தடவுவது, ஆகியவற்றை குறைத்துக்கொள்வதும் வெப்பத்தின் விளைவுகளில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்