முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி பதவிக்கு பொது வேட்பாளர் : சோனியாவுடன் யெச்சூரி ஆலோசனை

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  - ஜனாதிபதி பதவிக்கு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆலோசனை நடத்தி உள்ளார்.  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதி பதவிக்குத் தேர்தல் நடக்க உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக, ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டெல்லியில் உள்ள அவரது அலுவலக இல்லத்தில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்து பேசினார்.

கருத்தொற்றுமை
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ் குமாருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, சோனியாவை யெச்சூரி சந்தித்துள்ளார். அப்போது, கருத்தொற்றுமை உள்ள ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு பொது வேட்பாளராக அறிவிப்பது குறித்து சோனியாவுடன் யெச்சூரி ஆலோசனை நடத்தி உள்ளார். மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளும் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக நிறுத்தலாம் என்று சோனியாவிடம் யெச்சூரி கூறியுள்ளார். யெச்சூரியின் யோசனைக்கு சோனியா காந்தி சாதகமான பதில் அளித்துள்ளார் என்று மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ஆகியோருடனும் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து யெச்சூரி ஆலோசனை நடத்தி உள்ளார்.

முகர்ஜிக்கு மறுவாய்ப்பு?
‘‘காங்கிரஸின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜியையே 2-வது முறையாக ஜனாதிபதிபதவிக்கு வேட்பாளராக அறிவிப் பார்களா?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மார்க்சிஸ்ட் வட்டாரங்கள் கூறியபோது, ‘‘எல்லா கட்சிகளும் ஏற்றுக் கொண்டால், அவரையே பொது வேட்பாளராக அறிவிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும், 2-வது முறையாக ஜனாதிபதி பதவி வகிக்க பிரணாப் விரும்புகிறாரா என்பது அவர் எடுக்கும் முடிவைப் பொறுத்தது’’ என்று தெரிவித்தன. கடந்த 2012-ம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்குத் தேர்தல் நடந்தது. அப்போது ஆட்சியில் இருந்து காங்கிரஸ், பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக அறிவித்தது. அவரை எதிர்த்து பி.ஏ.சங்மாவைபாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணி அறிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்