முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலா 2 இலட்சம் நாட்டு ரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும் கலெக்டர் எஸ்.பிரபாகர் செய்தியாளர் பயணத்தின்போது தகவல்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், பாண்டியம்பாளையம் ஊராட்சியில்  அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் நாட்டு ரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்  அவர்கள் செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

நாட்டு ரக முருங்கை

மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்  அவர்கள் நாட்டு ரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

இலவசமாக வழங்கப்படும்

ஈரோடு மாவட்டத்தில்  கடந்த 29.05.2017 முதல் ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாக 1,20,000  நாட்டு ரக முருங்கை மரக்கன்றுகள் மற்றும் 1,20,000 பப்பாளி மரக்கன்றுகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக 03.06.2017 முதல் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் மரக்கன்றுகள் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது பெயரினை பதிவு செய்து ஊராட்சி செயலரை அணுகி இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் வகையில் வரும் ஜூலை 2017-க்குள் 2,00,000 நாட்டுரக முருங்கை மற்றும் 2,00,000 பப்பாளி மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டு ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நாற்றங்கால் தோட்டங்கள் அமைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. 

மரக்கன்றுகள்

மேலும் முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் வளர்ப்பதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறுகின்றோம். முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், ப்ரோட்டின் மற்றும் அனைத்து ஊட்டச் சத்துக்களும் உள்ளது.  100 கிராம் முருங்கை இலையில் 75 சதவீதம் இரும்புச் சத்து உள்ளது.  இதில் ஈரப்பதம் 75.9 சதவீதம்,  புரதம் 6.7 சதவீதம்,  கொழுப்பு 1.7 சதவீதம், தாதுக்கள் 2.3 சதவீதம், கார்போஹைட்ரேட்டுகள் 12.5 சதவீதம், கால்சியம் 400 மி.கி பாஸ்பரஸ் 70 மி.கி உள்ளது.   சாதாரண வீடுகளில்  காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.  இம்முருங்கை மரக்கன்றை வளர்க்கும் பொழுது முருங்கை இலை, முருங்கை காய், முருங்கை பூ என அனைத்தையும் நாம் உட்கொள்வதன் மூலம் பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது. 

இரண்டு மடங்கு புரோட்டின்

முருங்கை இலையில் பாலாடையை விட இரண்டு மடங்கு புரோட்டின் இருக்கிறது.  ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்துள்ளது.  வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது.  கேரட்டை விட 4  மடங்கு வைட்டமின் ஏ உள்ளது, பாலை விட  4 மடங்கு கால்சியம் உள்ளது. குழந்தைகள் முதல்  முதியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் முருங்கை இலையில் உள்ளது. 

வருடம் முழுவதும் பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கும் பப்பாளிப்பழம் இனிப்பான சுவையை தருவதோடு, கரோட்டீன்ஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ.பி,சி, ப்ளாவனாய்ட்ஸ், இரும்புச் சத்து, பொட்டாச்சியம், மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் மற்றும் நார்ச் சத்தினைத் தருகிறது.இருதயம் வலிமை பெறத் தேவையான சத்துக்களையும், ஆசனவாயில் ஏற்படக்கூடிய  புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தியையும் தருகிறது.  நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்கக் கூடிய வல்லமை பொருந்திய பப்பாயின் என்ற என்சைமினையும் தருகிறது. இது கண்பார்வைத்  திறனை அதிகரிக்கும் தன்மை கொண்டது,  கனியாத பப்பாளிப்பழத்தை 250 கிராம் உணவுக்கு முன் தொடர்ச்சியாக மூன்று மாத காலம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து ஆரம்ப நிலை சர்க்கரை நோய் முற்றிலும் நீங்கி விடும்.

உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ.சி. மற்றும் ஈ சத்துக்கள் உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை வெளியேற்ற உதவுகின்றன.  இதனால் கொழுப்பு உடலில் சேர்வதைத் தடுத்து ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் தடுத்து மாரடைப்பு வராமலும், இருதயம் பாதிப்பில்லாமல் இயங்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின்கள் பீட்டா கரோட்டீன் போன்றவை நுரையீரல், இரைப்பை, கருப்பைபுற்று நோய் ஏற்படுவதை தடுக்கின்றது. இது உடலில் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து, சளி, காய்ச்சல் வராமல் தடுக்கிறது.  குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளிக்காயை தோல் நீக்கி சாப்பிடுவதால் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும்.

ஆர்வம் உள்ளவர்கள்        

இத்தனை நன்மைகள் வழங்கக்கூடிய நாட்டுரக முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகளை பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் மரம் வளர்ப்பதில்  ஆர்வம் உள்ளவர்கள் இலவசமாகப் பெற்று, தங்களது வீடுகளில் வளர்த்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

25 யூனிட் வரை

மேலும் அரசு புறம்போக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண் மற்றும் சரல் போன்ற சிறு கனிமங்களை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்துவதற்கு எவ்வித கட்டமணமுமின்றி பொதுமக்கள் பயன்படுத்தவும், அரசுக்கு கட்டணம் செலுத்தி பிற பயன்பாடுகளுக்காக பயன்படுத்தவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்  அம்மா அவர்களின் நல்லாசியில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, அரசு புறம்போக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண் மற்றும் சரல் போன்ற சிறு கனிமங்களை நஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயி ஒருவருக்கு வண்டல்மண் ஒரு ஏக்கர் நஞ்சை உள்ள விவசாயிக்கு 25 யூனிட் வரையும், ஒரு ஏக்கர் புஞ்சை உள்ள விவசாயிக்கு 30 யூனிட் வரையும் வழங்க  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்கள்.

14 ஊராட்சியில்

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,030 குளங்களில் 539 குளங்களுக்கு வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட குளங்கள் மூலம் சுமார் 6,857 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அனுமதி வழங்கப்பட்ட பல்வேறு குளங்களில் நசியனூர் பேரூராட்சிக்குட்பட்ட 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுவலசு குளம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவாச்சி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருக்குமடைகுளம் ஆகிய குளங்களில் வண்டல் மண் எடுக்கும் பணியை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்  அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து