முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழக அரசு, நிலையான அரசு, உறுதியான அரசு, 123 சட்டமன்ற  உறுப்பினர்களைக் கொண்ட அரசு. எங்கள் ஆட்சியைப் பற்றி  விமர்சனம் செய்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

புதுக்கோட்டை மாவட்ட மக்களுடைய நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுகின்ற விதமாக 239 கோடி ரூபாயில் பிரம்மாண்டமான மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு ஆணையிட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, அரசு வேகமாக,  துரிதமாக செயல்பட்டு அந்தப் பணி 11 மாத காலத்திலே  நிறைவேற்றி மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனாதிபதி தேர்தலில் அதிமுக-வின் நிலைப்பாடு என்ன? நாங்கள்  இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தல் இப்பொழுது தான்  அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவாக முடிவு செய்து அறிவிப்போம். தமிழக அமைச்சர்களில் ஒரு அமைச்சர், பா.ஜ.க. ஒன்றும் தீண்டத்தகாத கட்சியில்லை, அதனால் ஆதரவு கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இதுவரைக்கும் எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைவதாக ஒரு தகவல் வந்துள்ளது, அதற்கு நீங்கள் ஏதாவது  பரிந்துரை செய்திருக்கிறீர்களா?. எய்ம்ஸ் மருத்துவமனையைப்  பொறுத்தவரையில், ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்கு அமைய வேண்டுமென்று மத்திய அரசிடம் தெரிவித்திருக்கின்றார்கள். அதன்படிமருத்துவமனையை, மத்திய அரசு தமிழகத்தில் அமைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

குடிநீர், நீட்தேர்வு, மாட்டிறைச்சி என அனைத்துப்  பிரச்சனைகளுக்கும் இதுவரை வாய் திறக்காமல்  மௌனமாக இருக்கிறார் என்று, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனவே.   நீட்தேர்வைப் பொறுத்தவரை எத்தனை முறை பேட்டி கொடுத்தேன் என்று உங்கள் அத்தனைபேருக்கும் தெரியும். பத்திரிகைக்கும் தெரியும், பிரதமரை மூன்று முறை சந்தித்த  போது, நீட் தேர்வு குறித்து அவரிடத்திலே, விவரமாக, விளக்கமாக, தமிழக மாணவர்கள், ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் பாதிப்பார்கள். ஆகவே, நீட் தேர்வில் தமிழகத்திற்கு  விதிவிலக்கு அளிக்கவேண்டுமென்று பலமுறை கோரிக்கை வைத்திருக்கின்றேன்,  உங்களுக்குத் தெரியும்.

மாட்டிறைச்சி சம்பந்தமாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?  இன்னும் மத்திய அரசினுடைய முழுமையான அறிக்கை  கிடைக்கப்பெறவில்லை. அதுகிடைத்தவுடன் எங்களுடைய  நிலைப்பாட்டை கூற முடியும். அதற்கிடையிலே மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர், எதிர்க்கட்சியினுடைய கோரிக்கைகள்  பரிசீலிக்கப்படும் என்ற கருத்தையும் தெரிவித்திருக்கின்றார்.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எரிவாயு...?  ஏற்கனவே நான் தெரிவித்திருக்கின்றேன். மக்களுக்கு எந்தவகையில் பாதிப்பு  ஏற்படுத்தினாலும், அதை அம்மாவினுடைய தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என்று ஏற்கனவே தமிழக அரசின் நிலைப்பாட்டை கூறியிருக்கிறேன்.  தமிழக அரசு  ஸ்திரத்தன்மையற்ற அரசு என்று ஒரு கருத்தை முன்  வைத்திருக்கிறார்கள். இரண்டு அணிகளின் இணைப்பு சம்பந்தமாக  என்ன நடவடிக்கை நீங்கள் எடுக்க இருக்கிறீர்கள்? தமிழக அரசு  வலுமையாக இருக்கின்றது.  123 சட்டப்பேரவைஉறுப்பினர்களைக் கொண்டு, ஒரு வலிமையான கட்சியாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.நாங்கள் ஏற்கனவே, 100 நாள் திட்டத்தைப் பற்றி, தெளிவாக எல்லா ஊடகங்களிலும்,  பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தியிருக்கின்றோம். இதுவரை  எந்த ஒரு அரசும் செய்யாத அளவிற்கு மறைந்த முதல்வர்  ஜெயலலிதா வழியிலே நின்று சிறப்பான திட்டங்களை இன்றைக்கு  நாட்டு மக்களுக்குத் தந்திருக்கிறது. விவசாயிகளுக்கு, ஏரி, குளம்,  அணைகளிலே வண்டல் மண் அள்ளுகின்ற திட்டம். அந்தத்  திட்டத்தை இன்றைக்கு அம்மாவினுடைய அரசு நிறைவேற்றியிருக்கிறது. மணலை, அரசே ஏற்று இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறது.

அதோடு இன்றைக்கு நிலத்தினுடைய வழிகாட்டி மதிப்பு, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படி, ஏராளமான திட்டங்களை, அம்மாவினுடைய அரசு,  குறுகிய காலத்திலே விரைந்து செயல்பட்டு, இன்றைக்கு மக்கள் மனத்திலே இடம்பெற்றிருக்கிறது. பொறுக்க முடியாதவர்கள், வேண்டுமென்றே, திட்டமிட்டு அவதூறான செய்திகளை இன்று  பரப்பி வருகிறார்கள். 

மருத்துவர்கள் பற்றாக்குறை...? மருத்துவர்கள் பற்றாக்குறை என்ற  கேள்வி எழவில்லை. இருந்தாலும், அரசு, காலியிடங்கள்  அனைத்தையும் நிரப்புவதற்கு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எப்பொழுது  பார்த்தாலும் இந்த அரசு பினாமி அரசு, சுனாமி அரசு, ஜெராக்ஸ் அரசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அம்மாவினுடைய அரசைப் பொறுத்தவரை, இது நிலையான அரசு. மக்கள் என்ன எண்ணுகின்றார்களோ, அதை நிறைவேற்றுகின்ற அரசாக இன்று இருந்து கொண்டிருக்கிறது. அத்தனை பேருக்கும் நன்றாகத் தெரியும், உங்கள் பத்திரிகை, ஊடகங்களுக்கும் தெரியும், அடிக்கடி, பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் சந்தித்து பேசினால்தான் அந்த அரசு இருக்கிறதென்று நினைக்காதீர்கள்.

எங்களுடைய செயல்பாடுகளை நான் ஏற்கனவே  பொதுக்கூட்டத்திலே அழகாக பேசியிருக்கின்றேன். இன்றைக்கு கல்லூரியை திறந்துவைத்துப் பேசியிருக்கின்றேன். பேசுவது மட்டுமல்ல, செயல்பாட்டினுடைய திறமையையும் நாங்கள்காட்டிக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, அம்மாவினுடைய அரசு, நிலையான அரசு, உறுதியான அரசு, 123 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசு. இவர்களுடைய ஆட்சிகாலத்திலே, அரசாக இருந்தது. எங்கள் ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து