முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீராணம், நாரைக்கால் ஏரிகளில் தூர்வாரும் பணி: கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      கடலூர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் வீராணம் ஏரி, நாரைக்கால் ஏரி மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வண்டல் மண், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை தூர்வாரும் பணியினை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன்  முன்னிலையில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,    பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

 தூர்வாரும் பணி

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஏரிகள் மற்றும் குளங்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 537 ஏரிகள் மற்றும் குளங்கள் கண்டறியப்பட்டு 323 இடங்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு 3,17,000 கனமீட்டர் அளவிற்கு வண்டல், மண் மற்றும் களிமண் எடுக்கப்பட்டு விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளின் கீழ் வண்டல் மண் தூர்வாரப்பட்டு விவசாய நிலங்களுக்கு அளிப்பதால் பயிர் சாகுபடி மகசூலினை அதிகரிக்கச் செய்யமுடியும்.    காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி பெரிய குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இக்குளத்தினை தூர்வாரப்பட்டு இருபுறமும் கரையினை பலப்படுத்தி, அழகுபடுத்துவதோடு, பொதுமக்களுக்கு நடைபாதை அமைத்து நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தித்தரவேண்டும் என பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.வண்டல் மண், மண் மற்றும் களிமண்ணை விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலங்களுக்கு அதிகபட்சமாக 1 ஏக்கருக்கு 75 கன மீட்டரும். (25 டிராக்டர் லோடு), புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 90 கனமீட்டரும் (30 டிராக்டல் லோடு), வீட்டு பயன்பாட்டிற்கு 30 கன மீட்டரும் (10 டிராக்டர் லோடு)க்கு மிகாமலும், மண்பாண்ட தொழிலுக்கு 60 கன மீட்டர் (20 டிராக்டர் லோடு)க்கு மிகாமலும் எடுத்துக்கொள்ளலாம்.

அலுவலர்களுக்கு அறிவுரை

முன்னதாக காட்டுமன்னார்கோயில் வீராணம் ஏரி, கீழக்கரை அணைக்கட்டு பகுதி, மேலக்கரை அணைக்கட்டு பகுதி, நாரைக்கால் ஏரி, காட்டுமன்னார்கோயில் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது ஏரிகள் மற்றும் குளங்களில் எடுக்கப்படும் மண்களை சமமாக எடுக்கப்பட்டு சமப்படுத்துவதோடு, எடுக்கப்பட்ட மண்களை கொண்டு சுற்றிலும் உள்ள கரைகளை பலப்படுத்தவேண்டும். மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்தராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் முத்துகுமார், பாஸ்கர், ராஜராஜன், கீழக்கரை அணைக்கட்டு உதவி செயற்பொறியாளர் பி.கே.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து