முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக் 6 முதல் புதிய தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை : சென்னை மாநகராட்சி தமிழ் திரைப்படங்களுக்கு விதித்த கேளிக்கை வரியால், அக்டோபர் 6 முதல் புதிய தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதமும், தமிழ் அல்லாத மற்ற மொழி திரைப்படங்களுக்கு 20 சதவிகிதமும் உள்ளாட்சி கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவித்தது. செப்டம்பர் 27 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த இரட்டை வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்டோபர் 6ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்த் திரைப்படத்துறையில் ஏற்கனவே பைரஸி முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18%, 28% ஜிஎஸ்டி, என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழக அரசால் கடந்த 27.9.2017 அன்று தமிழ்ப் படங்களுக்கு அறிவித்த 10% கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை அளித்தோம். இருந்தும், பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள திரையரங்கு நுழைவு கட்டணத்தினை முறைப்படுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களை மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்தும். இது சம்மந்தமாக 03.10.2017 தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்துக் கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தினை முறைப்படுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை தமிழ் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதனால், வருகிற வெள்ளிக்கிழமை 06.10.2017 முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து