முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு மக்கள் இயக்கமாக செயல்படுத்திட வேண்டும்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      சேலம்
Image Unavailable

தமிழ்நாடு முதலமைச்சர் அறுவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வியாக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக அனுசரிக்க படுவதையொட்டி சேலம் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, மாவட்ட முழுவதும் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை தொடங்கி வைத்து செய்தியாளயர்களிடம் தெரிவித்ததாவது.

மக்கள் இயக்கம் 

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் பருவமழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு போர்கால அடிப்படையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற ஏ.டி.எஸ் கொசுக்கள் வளரும் இடங்களை கண்டறிந்து அதனை அழிக்கும் பணியினை தீவிரப்படுத்தும் விதமாக தற்பொழுது ஒவ்வொரு வியாக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக அனுசரிக்க படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், 385 கிராம ஊராட்சிகளிலும், டெங்கு தடுப்பு பணிகளுக்கு தேவையான களப்பணியாளர்களை போதுமான அளவிற்கு நியமித்து குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை போர்கால அடிப்டையில் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மேலும், ஏ.டி.எஸ் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக 1,788 அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மற்றும் 124 மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளிலும் கொசு ஒழிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 2,696 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 1,789 சத்துணவு மையங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மூலமாக கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள 398 துணை சுகாதார நிலையங்கள், 83 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 21 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள 12 அரசு மற்றும் 152 தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்திடவும், போதிய மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்திடவும், மருத்துவமனை வளாகங்களில் கொசு உற்பத்தியாகாத வண்ணம் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடிய நிலவேம்பு கசாயத்தினை பள்ளி கூடங்கள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி, ஓமலூர் பேருந்து நிலையம், ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் ஆவடத்தூர் ஊராட்சி சவுரியூர், மேட்டூர் என இன்று ஒருநாளில் மட்டும் மாவட்ட முழுவதும், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் , ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள் என அனைத்து இடங்களுக்கும் நேரடியாக சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் நேற்றைய தினம் (04.10.2017) மட்டும் சங்ககிரியில் 105.3 மி.மீ, வாழப்பாடி 102.3 மி.மீ, தம்மம்பட்டி 90.6 மி.மீ, கெங்கவல்லி 90.4 மி.மீ, ஓமலூர் 89.0 மி.மீ, ஏற்காடு 87.4 மி.மீ, எடப்பாடி 78.2 மி.மீ, சேலம் 60.0 மி.மீ, காடையாம்பட்டி 58.4 மி.மீ, பெத்தநாயக்கன்பாளையம் 58.0 மி.மீ, வீரகனூர் 52.0 மி.மீ, ஆத்தூர் 46.6 மி.மீ, மேட்டூர் 31.2 மி.மீ, ஆணைமடுவு 30.0 மி.மீ, கரியகோவில் 5.0 மி.மீ என ஆக மொத்தம் 984.0 மி.மீட்டரும், நேற்றைய தினம் மாவட்டத்தின் மொத்த சராசரி மழையளவாக 65.6 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் விவசாயம், குடிநீர் தேவை உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்கும் இந்த மழைநீர் மிகுந்த பயனுள்ள ஒன்றாக அமைந்துள்ளது. அதே சமயம் ஆங்காங்கு தேங்க கூடிய சுத்தமான மழை நீரில் ஏ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெங்கு தினமான ஒவ்வொரு வியாழக்கிழமையும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டின் உள்ளேயும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக்கும் பணியினை மேற்கொள்ளவும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தி, காய்ச்சல் இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தினை உருவாக்கிட முன்வர வேண்டுமென இந்த தருணத்தில் அனைவரையும் கேட்டுகொள்கிறேன். மேலும் பள்ளி மாணவியர்கள் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் ஒதுக்கி தங்கள் வீடுகள், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி, சுகாதார பணிகளின் துணை இயக்குநர் மரு.பூங்கொடி, ஓமலூர் வட்டாட்சியர் சித்ரா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து