முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்னீரில் வாழும் மிதவை வகை பெரணி அசோலா

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

அசோலா என்பது என்ன?

அசோலா நன்னீரில் வாழும் மிதவை வகை பெரணியாகும். அசோலா தழைச் சத்தை நிலை நிறுத்தும் நீலப் பச்சைப் பாசியைக் கூட்டு வாழ்முறை நிலையில் கொண்டுள்ளது. இதனால் நெல்லிற்கு சிறந்த உயிர் உரமாக அசோலாவைப் பயன்படுத்தலாம். நீலப்பச்சைப் பாசியானது காற்று மண்டலத்திலிருந்து தழைச் சத்தை நிலைநிறுத்தும் திறன் கொண்டதாகும்.

சமீப காலமாக அசோலா ஒரு உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவன மாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 35 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்கு தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோட்டின் ஆகிய சத்துக்கள் உள்ளன. பீட்டாகரோட்டின் நிறமியானது வைட்டமின் ஏ. உருவாவதற்கு மூலப்பொருளாகும். இச்சத்து உள்ளமையால் நோய் எதிர்ப்பு சக்தி கோழிகளுக்கு அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உட்கொள்வ தால் கண்பார்வைக்கு உகந்தது.
அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பதால் பால் உற்பத்தி 15-20 சதவீதம் அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது.

அசோலாவின் நன்மைகள் என்னென்ன?

1. அசோலாவை தீவனமாகப் பயன்படுத்துவதால் நாள் ஒன்றுக்கு ஒரு கோழிக்கு அடர்தீவனச் செலவில் 20 பைசா சேமிக்கலாம் என்று ஆராய்ச்சிபூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2. அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பதால் பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலின் கொழுப்புச்சத்து 10 விழுக்காடு வரை உயருகிறது. கொழுப்புச்சத்து அல் லாத திடப்பொருளின் அளவு மூன்று விழுக்காடு வரை கூடுகிறது.

3. அசோலா இடப்பட்ட கோழியின் முட்டையின் எடை, ஆல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர்தீவனம் மற்றும் இடப்பட்ட கோழியின் முட்டை யின் அளவை விட அதிகமாக உள்ளது.

பரிந்துரைக்கப்படும் அசோலாவின் அளவுகள் : கால்நடை ஒன்றிற்கு அசோலாவின் அளவு (நாள் ஒன்றுக்கு) : பால்மாடு, உழவு மாடு - 1-1.5 கிலோ, முட்டை மற்றும் இறைச்சி கோழி, வான்கோழி - 20-30 கிராம், ஆடு – 300-500 கிராம், வெண்பன்றி – 1.5-3 கிராம், முயல்- 100 கிராம்.

அசோலாவை வளர்க்க தேவையான பொருட்கள் (20 சதுர அடி அளவிற்கு) அசோலா தாய்வித்து – 5 கிலோ, வளமான மண் - 2 செ.மீ, சமமான அளவு, பசுஞ்சானம் -5 கிலோ,  சூப்பர் பாஸ்பேட் - 100 கிராம், சில்பாலின் ஷீட் - 20 சதுர அடி, தண்ணீர் – 100 லிட்டர்.

அசோலாவை உற்பத்தி விளக்க அட்டவணை : நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும், பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் ஷீட்டை சீராக விரிக்கவும், பாலித்தீன் ஷீட்டின் மேல் 2 செ.மீ அளவில் மண்இட்டு சமன் செய்யவும், இதன் மேல் 2 செ.மீ. அளவிற்கு தண்ணீர் ஊற்றவும், பின்னர் பாத்தி ஒன்றிற்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை இடவும், அதன் பின்னர் 5 கிலோ பசுஞ் சாணம் கரைத்து இடவேண்டும், பின்னர் இப்பாத்தியில் 5 கிலோ அசோலா தாய்வித்து இடவேண்டும், தினமும் காலை அல்லது மாலையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்கிவிட வேண்டும், 10-15 நாட்களுக்குப் பின்னர் மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம்.

அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கக்கூடிய முறைகள் : அசோலாவை கோழி, கறவை மாடு, உழவு மாடு, வெண்பன்றி, வாத்து, முயல் மற்றும் ஆடுகளுக்கு நேரடியாக பசுந்தீவனமாக வழங்கலாம். அசோலாவை கால்நடைகளுக்கு உயிர்த்திரளாகவோ, உலர் அசோலாவாகவோ, சிறு உருண்டை களாகவோ மற்றும் பதனம் பசுந்தீவனமாகவும் அளிக்கலாம்.

உலர் அசோலா : அசோலாவை வெயிலில் உலர்த்தி, சிறு துகள்களாக மாற்றி தீவனமாக அளிப்பது தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் இவற்றை அடர் தீவனத்துடன் எளிதாக கலந்து அளிக்கலாம். மேலும் இவை நீண்ட கால சேமிப்புத் திறன் உடையவை.

அசோலாவில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு : பொதுவாக அசோலாவை பூச்சி மற்றும் நோய்கள் அதிகம் தாக்குவதில்லை. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி மற்றும் நோய்கள் வருவ தற்கான வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து அசோலாவை பாதுகாக்க பாத்தியின் இருபுறமும் காற்று அதிகமாக புகாதவாறு தடுப்பு வலைகள் அமைக்கப்பட வேண்டும். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மி.லி. வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்.

ஆகவே அசோலாவை தீவனமாக அளிப்பதால் கால்நடை மற்றும் கோழி களின் உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கு அதிக வருமானம் பெற உதவுகிறது.

அசோலாவில் உள்ள சத்துக்கள் (மூ உலர் எடை அளவில்) புரதச்சத்து –25-30, தழைச்சத்து –5.0, மணிச்சத்து -0.5, சாம்பல் சத்து -2.0-4.5, சுண்ணாம்புச்சத்து–0.1-1.0, மக்னீசியச்சத்து –0.45, இரும்புச்சத்து –0.26, கொழுப்புச்சத்து –3.0-3.3, சர்க்கரை –3.4-5.5, மாவுச்சத்து –6.5.

தொகுப்பு : முனைவர். து.ஜெயந்தி, முனைவர். ப.ரவி, மற்றும் மருத்துவர் ந.ஸ்ரீபாலாஜி

தொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து