முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர், செஞ்சி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் செஞ்ச பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பிற்கென மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கலெக்டர் இல.சுப்பிரமணியன், அவர்களின் நேரடிப் பார்வையில், டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.

ஆய்வு

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூத்தமேடு ஊராட்சிப் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும், டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.  செஞ்சி பேரூராட்சியை சேர்ந்த ராஜேந்திரன் நகர் பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா எனவும், கழிவுநீர் வாய்க்கால்கள், தேவைற்ற பொருட்களான பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டுஉரல்கள் ஆகியவற்றில் நீர் தேங்கி உள்ளதா எனவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இவ்வாய்வின்போது, இராஜேந்திரன் நகர் தேசூர்பேட்டை மெயின்ரோடு பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டில், தண்ணீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி ஆகியவற்றில் நீர் தேங்கியுள்ளதா எனவும், வீட்டின் மேற்புறத்தில் மழை நீர் தேங்கியுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு அதிக அளவில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதால், வீட்டின் உரிமையாளருக்கு ரூ.50,000ஃ- அபராதம் விதித்து, பேரூராட்சி சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.செஞ்சி ஊராட்சி ஒன்றியம் தச்சம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் தச்சம்பட்டு காலனிப் பகுதிகளில் வீடு வீடாக சென்று கொசுப்புழு உள்ளதா என ஆய்வு செய்தார்.  இவ்வாய்வின்போது, நடுநிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடத்தின் தரத்தினையும் ஆய்வு செய்தார்.ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை சுகாதாரமாக பராமரிக்கவும், தினந்தோறும் குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்கவும், வாரம் ஒருமுறை தொட்டியினை தூய்மைப்படுத்தவும், ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.

 இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வி.மகேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அருணாசலம், செஞ்சி வட்டாட்சியர் .கலாவதி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மலர்விழி, பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து