Idhayam Matrimony

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 20ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.அன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் காலை மற்றும் மாலையில் யாக சாலை பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிசால மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் மஞ்சள் பொடி, மா பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்-வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.கந்தசஷ்டி திருவிழாவின் 6ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விசால மண்டபத்திற்கு எழுந்தருளினார். தீபாராதனைக்கு பின் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
 

ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படை வீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலையில் கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். மாலை 4.30 மணிக்கு, சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டார்.முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகன் தனது பரிவாரங்களுடன், முருக பெருமானை நோக்கி போர்புரிய சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே வந்து நின்றான். மாலை 5.05 மணிக்கு யானை முகம் கொண்ட தாரகாசூரனை, முருகபெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். அதன் பிறகு கன்மம் உருவம் கொண்ட சிங்கமுகாசூரன், அதேபோல் முருகனை வலம், இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருக பெருமான் தன் வேலால் வதம் செய்தார்.சகோதரர்களை தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மன் தனது படை வீரர்களுடன் வேகமாக முருக பெருமானுடன் போர் புரிய வந்தான். முருகக் கடவுள் வேல் எடுத்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்திற்கு சென்றார். முருகனுக்கும், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதிக்கு சென்றார். அங்கு இருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம் (சாயாபிஷேகம்) நடந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்-பட்ட தகடுகள் வழங்கப்பட்டன-. சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி பல மணி நேரம் வரிசையில் காத்துநின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காண கோவிலுக்கு வந்து இருந்தனர். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே டி.வி.க்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் சூரசம்ஹார விழாவை கூட்ட நெரிசல் இல்லாமல் பார்க்க பெரிய டிஜிட்டல் திரை கோவில் வளாகத்தில் 5 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்தன. வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. இதேபோன்று திருச்செந்தூர் நெல்லைக்கு இரவு சிறப்பு ரெயில் விடப்பட்டு இருந்தது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னிஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற 9 மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஊர்காவல்படடையினர் என 2500க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். 

 நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் நீதிபதிகள் சொக்கலிங்கம், பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நிதிபதி திலிப் நிகோலஸ், மாவட்ட உரிமையியல் நீதித்துறை நீதிபதி சிவாஜி செல்லையா, தினேஷ்குமார், காமராஜ், அண்ணாமலை, கோயம்புத்தூர் மாஜிஸ்திரேட் நம்பிராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், பயிற்சி கலெக்டர்கள் சரவணன், இளபவத், கூடுதல் ஆணையர் திருமகள், துணை ஆணையர் செல்லத்துரை, திருச்செந்தூர் ஆர்டிஓ கணேஷ்குமார், இணை ஆணையர்கள் பரஞ்ஜோதி, பாரதி, அன்புமணி, செந்தில்வேலன்,  பாஜக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சிவமுருகஆதித்தன், ஹோட்டல் மணி அய்யர் ரமணி, நாராயணன், ஆனந்த், ஸ்ரீவீரபாகு மஹால் வீரபாகு, விவேகா கன்ஸ்ரக்சன் நாராயணன், வெங்கடேசன், ஹோட்டல் அர்ச்சனா கிட்டப்பா, சிவமுருகன் லாட்ஜ் அருள், ஹோட்டல் ரமேஷ் அய்யர் ரமேஷ், பாலமுருகன், நாகராஜன், கோல்டன் ரோட்டரி சங்க தலைவர் எல்.எஸ்.ஜுவல்லர்ஸ் லெட்சுமணன்;, ஆறுமுகநேரி மகேஷ் கார்மெண்ட்ஸ் மகேஷ், அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், காயல்பட்டணம் பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன், ரத்தினா லாட்ஜ் தங்கராஜ், தேவஸ்தான கேண்டின் ராஜேஸ்வரன், செங்கண்ணன், கந்தன், வீரக்கண், அசோக்பவன் ராஜா பண்ணையார், சீனி பண்ணையார், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய திமுக துணைசெயலாளர் வாழவல்லான் மகராஜன், வேல்குமார் கார்மெண்டஸ் வேல்குமார், குமரேசபாண்டியன், என்.ஜி.எம் கன்சல்டிங் நமச்சிவாயம், தமிழ்நாடு பிராமண சங்க திருச்செந்தூர் கிளை ஆலோசகர் கிருஷ்ணன் காந்தி தினசரி மார்கெட் சங்க தலைவர் திருப்பதி, இன்ஸ்பெக்டர்கள் பிச்சையா, ஷிஜாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி, அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், டிஐஜி (பொ) கார்த்திகேயன், எஸ்பி மகேந்திரன் ஆகியோர் வழிகாட்டுதலின் படி திருச்செந்தூர் டிஎஸ்பி தீபு தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். நகரின் முக்கிய இடங்களில் தீயணைப்பு துறையின் சார்பில் 3 தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்து.கடலின் உள்ளே மெரையின் போலீசார் படகுகள் மூலம் பக்தர்களை கண்காணித்து வந்தனர். டவுன் பஞ்சாயத்து சார்பில் நகரின் முக்கிய இடங்களில் மினரல் வாட்டர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.சூரசம்ஹார நிகழ்ச்சியை திருக்கோவில் வளாகத்தில் பெரிய எல்.இ.டி திரையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து