முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநகர் , மேலஅனுப்பானடி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை அரசு சுகாதாரத் துறை செயலர் இராதாகிருஷ்ணன் ஆய்வு

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி திருநகர் மற்றும் மேல அனுப்பானடி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்.   முன்னிலையில் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலர் மரு.இராதாகிருஷ்ணன்,   ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.98 திருநகர் பகுதியில் டெங்கு பாதித்த வீட்டிற்கு நேரடியாக சென்று வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்குமாறும், குடிநீரினை மூடி பாதுகாப்பாக வைக்குமாறும் கூறினார். மேலும் திருநகர் பகுதிகளில் வெகுநாட்களாக பூட்டப்பட்டுள்ள வீடுகளில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் திறந்து சுத்தம் செய்யுமாறும், அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ மூலம் பதிவு செய்யுமாறும், சுத்தம் செய்வதற்கான செலவு தொகையினை சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் வசூலுக்குமாறும் உத்தர விட்டார். ஒவ்வொரு வாரத்திலும் ஏதேனும் ஒரு நாள் முழுவதும் பூட்டியுள்ள வீடுகளிலும், காலிஇடங்களிலும் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ளுமாறு கூறினார். மேலும் திருநகர் வார்டு அலுவலகம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், திருநகர் 7 வது பேருந்து நிறுத்த பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த டெங்கு தடுப்பு பணிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் வீடுகளை சுற்றி நல்ல தண்ணீர் தேங்காதவாறும், குடிநீரினை மூடி பாதுகாப்பாக வைக்குமாறும், அலுவலர்கள் மழைநீர் வடிகாலினை சுத்தம் செய்யுமாறும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து மண்டலம் எண்.3 வார்டு எண்.56 மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 6ல்  டெங்கு பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் பிடித்து வைத்துள்ள பிளாஸ்டிக் டிரம்களை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கழுவி சுத்தம் செய்து பாதுகாப்பாக மூடி வைக்குமாறு கூறினார். சிந்தாமணி மெயின் ரோட்டில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியினை பார்வையிட்டு மூடி பாதுகாப்பாக வைக்குமாறும், மாநகராட்சியின் சார்பில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டிகளை மூடி வைக்குமாறும்,தேவையில்லாத சின்டெக்ஸ் தொட்டிகளை அகற்றுமாறும் உத்தரவிட்டார்.
இது குறித்து அரசு சுகாதாரச் துறை செயலர் அவர்கள் தெரிவித்ததாவது :
 தமிழ்நாடு முழுவதும் பருவ காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல் குறிப்பாக டெங்கு காய்ச்சல் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர், உள்ளாட்சி அமைப்புகள், பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறையும், குறிப்பாக  பொதுமக்களையும் இணைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை, திருநெல்வேலி, சேலத்தில் முக்கிய சில ஒன்றியங்கள், சென்னை அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், சிவகங்கை போன்ற இடங்களில் இதன் தாக்கம் இருந்து கொண்டிருக்கும் காரணத்தினால் எப்படியாவது இந்த பகுதிகளில் நல்ல தண்ணீர் உள்ள இடங்களை கண்டறிந்து பொதுமக்களே அதனை மூடி வைப்பதற்கும், அரசு அலுவலங்களில் வராமல் தடுப்பதற்கு நடவடிக்கை, தனியார் நிறுவனங்களில் நடவடிக்கை என இது மாதிரி கொசு உற்பத்தி காரணிகளை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக பூட்டிய வீடுகள், பெரிய பெரிய புளு நிற டிரம்களை மூடாமல் இருப்பது, சின்டெக்ஸ் தொட்டிகள் மூடாமல் இருப்பது, கட்டிட பணிகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர், காலிஇடங்களில் திடக்கழிவுகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் தண்ணீர் தேங்கி நிற்பது, ஷம்புகள், பிட் டேப்கள் போன்றவற்றில்தான் இந்த டெங்கு கொசு வளர்கின்றன. எனவே இவற்றை சுத்தம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று காலை நேரங்களில் கை புகை தெளிப்பான் அடிக்கும் போது வளர்ந்த கொசு புழுக்கள் அழிப்பதும், வெயில் வந்த பின்னர் டெக்னிக்கல் முறையினை பயன்படுத்தும் படியாக வழிகாட்டுதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வெயிலின் போது இந்த மருந்து பயனற்றதாக உள்ளது என்பதை கண்டறிந்து இந்த புதிய டெக்னிக்கல் முறையை மாற்றியுள்ளோம். அதற்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் வரும்போது பொதுமக்களிடம் எங்களது அன்பான வேண்டுகோள் என்னவென்றால் டெங்கு காய்ச்சலும் ஒருவகையான வைரஸ் காய்ச்சல்தான்.  டெங்கு காய்ச்சல் வந்த ஒரு விழுக்காடு நபர்களுக்கு தட்டணுக்கள் குறைந்து நீர்ச்சத்து வெளியேறும்போது, கிருமி உள்வரும் போது டெங்கு சாட்ஸ் என்றோ, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும் காரணத்தினால் காய்ச்சல் கண்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். காலம் தாழ்த்தி வர கூடாது. தமிழக அரசின் சார்பில் 837 செல் கவுண்டர்கள் ரூ.23 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. உடனுக்குடன் தட்டணுக்கள் இரத்த அணுக்கள் அளவை பார்த்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்குவதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கக் கூடிய காய்ச்சல் கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று பெரியவர்களுக்கு சித்த மருத்துவ மேற்பார்வையில் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற அனைத்து வசதிகளையும் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.
இந்த ஆய்வின்போது ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப. துணை ஆணையாளர் திரு.ப.மணிவண்ணன், பொது சுகாதாரத் துறை பயிற்சி நிலைய துணை  இயக்குநர்  செந்தில்குமார், உதவி நகர்நல அலுவலர்  பார்த்திபன், உதவி ஆணையாளர்கள்  ரமேஷ்,  கௌசலாம்பிகை செயற் பொறியாளர்கள்  சந்திர சேகரன்,  சேகர், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், சுகாதார அலுவலர்கள்  ராஜ்கண்ணன், நாகராஜ், சுகாதார ஆய்வாளர்கள்  சுப்புராஜ், வெங்கடசாமி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து