முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடப்பள்ளி பாசனப் பகுதியில் இயந்திர நெல் நடவுப் பணி துவங்கியது. மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பங்கேற்ப்பு

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      ஈரோடு
Image Unavailable

தடப்பள்ளி பாசனப் பகுதியில் இயந்திர நெல் நடவுப் பணி துவங்கியது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பங்கேற்றார்

தற்போது கொடிவேரி அணைக்கட்டு பாசனங்களான தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  இதில் தடப்பள்ளி பாசனப் பகுதியில் சுமார் 7500 ஏக்கருக்கு நெல் சாகுபடி செய்ய நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வதற்கு பாய் நாற்றாங்கால் தயார் செய்யப்பட்டுள்ளது.  இயந்திரம் மூலம் ஒன்று அல்லது இரண்டு நாற்றுக்களை 15-நாட்களுக்குள் நடும்போது தூர்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் கூடுவதால் இந்த முறை விவசாயிகளிடம் பிரபலமாகி வருகிறது. 

கோபி வட்டாரத்தில் மேற்படி பாய் நாற்றாங்கால் மூலம் தயார் செய்த நாற்றுகளை இயந்திரம் மூலம் நடவு செய்யும் பணியை செங்கலரைக்கரை பகுதியில் கரட்டடிபாளையம் சுப்பிரமணியம் என்பவரது வயலில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது – ‘ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் வறட்சிக்கு பிறகு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காளிங்கராயன் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.  ஈரோடு மாவட்டத்திற்கு உணவு தானிய உற்பத்தி இலக்காக  3 இலட்சத்து இரண்டாயிரத்து எட்நூற்று இருபத்து ஏழு மெ.டன்கள் (3,02827 மெ.டன்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த இலக்கை எய்துவதற்கு நெல், சிறுதானியம், பயறுவகைகள் ஆகிய பயிர்களை தீவிரமாக சாகுபடி மேற்கொள்ள வேளாண்மைத்துறை களப்பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.  இயந்திரம் மூலம் நெல் நடவு  செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2000/- பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.  மேலும், மானாவாரி பகுதி விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 2500 ஏக்கர் கொண்ட தொகுப்பு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு வேளாண்மை, வேளாண்மை பொறியியல், கால்நடைப் பராமரிப்பு, வேளாண்மை வணிகம் உள்ளிட்ட துறைகள் மூலம் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும், 20 சிறு, குறு விவசாயிகள் கொண்ட உழவர் ஆர்வலர் குழுக்களை ஏற்படுத்தி 50 குழுக்களுக்கு 1000 விவசாயிகள் அடங்கிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார். 

பேட்டியின் போது கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி, பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பத்மநாபன் மற்றும் வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர்.  முன்னதாக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியிலிருந்து கிராமத் தங்கல் திட்டத்தின்கீழ் வருகை தந்துள்ள இறுதி ஆண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவியர் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வதை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளில் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.  இயந்திர நடவு பயிற்சி ஏற்பாடுகளை கோபி வட்டார அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் அரவிந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மகாவிஷ்ணு, தமிழ்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து