முன்பட்ட கரும்பு சாகுபடி முத்தான வருமானத்திற்கு முதல்படி

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      வேளாண் பூமி
velon

Source: provided

சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் முன்பட்டம் என்று சொல்லகூடிய டிசம்பர் – ஜனவரி மாதங்களில் தான் கரும்பு சாகுபடி 70 சதவீதத்திற்கும் அதிகமாக  பயிரிடப்படுகிறது, வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்குவதால் கிணறு மற்றும் நீர் நிலைகளில் நீர் இருப்பு இருக்கும். ஆதலால் பணப்பயிரான கரும்பு சாகுபடி எளிதாகிறது. மேலும் முன்பட்ட பருவ சாகுபடி செய்வதால் ஏற்படும் பலன்கள்.

1. கரும்பின் முளைப்பிற்கு இதமான தட்பவெப்பநிலை நிலவுவதால் கரும்பில் முளைப்புத்திறன் அதிகமாகிறது.

2. பருவமழை காரணமாக நட்ட மூன்று மாதங்களுக்கு நீர்பாய்ச்ச தேவையில்லை.

3. இளங்குருத்துப் புழுவின் தாக்குதல் அறவே இல்லை.

4. கிணற்றில் நீர் குறைந்தாலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு நீர் பாய்ச்சி விதை கரும்பு ஆக வெட்ட வாய்ப்பு.

5. பயிர் பராமரிப்பு ஆட்கள் எளிதாக கிடைக்கும் வாய்ப்பு.

6. அடுத்த அரவைப்பருவத்தில் கரும்பை முன்னதாக வெட்ட வாய்ப்பு இருப்பதால் குறித்த காலத்தில் பணம், மற்றும் வெட்டு ஆட்கள் எளிதாக கிடைக்கும் அரிய வாய்ப்பு.

7. பண்டிகை காலமாதலால் கரும்பிற்கு தேவை அதிகம்.

சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களுக்கு ஏற்ற இரகங்கள் :  CO.0212, CO86032

 

நடவு முறைகள்:

1. கரணை மூலம் நடவு.

2. ஒரு பருச்சீவல்கள் மூலம்.

விதைக்கரணை தேர்வு :

1. 6 மாத கரும்பில் இருந்து மட்டுமே விதைக்கரணை தேர்வு செய்ய வேண்டும்.

2. பூச்சிநோய் தாக்காத விதைகரும்புகளை தேர்வு செய்தல் வேண்டும்.

3. மறுதாம்புக்கரும்பில் இருந்து விதைக் கரணை தேர்வு செய்யக்கூடாது.

4. தொலைதூரம் எடுத்துச்செல்வதாய் இருந்தால் தோகை உரிக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

விதைக்கரணைகளின் அளவு:

1. கரணை மூலம் நடவு செய்ய 30,000 இருபருக்கரணைகள் / ஏக்கருக்கு

2. ஒரு பருச்சீவல்கள் மூலம் நடவு ( நீடித்த நவீன கரும்பு சாகுபடி) ஏக்கருக்கு 65௦௦ நாற்றுக்கள்.

கரணை நேர்த்தி:  விதைக்கரணைகளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் பெவிஸ்டின், 5 மில்லி  குளோர் பைரிபாஸ் 5gm சுண்ணாம்பு, 5 கிராம் யூரியா கலந்த கரைசலால் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும், பவிஸ்டின் பூஞ்சான நோய்களிலிருந்தும் குளோர் பைரிபாஸ் சாறு உறிஞ்சும் பூச்சிகளிளிருந்தும், சுண்ணாம்பு வறட்சியை தாங்கவும், யூரியா முளைப்புதிறனை கூட்டவும் உதவுகிறது.

நடவு முறை:  3 அடிக்கு ஒரு பார் பிடித்து கொண்டு கரணைகளை வயலில் தண்ணீர் பாய்ச்சியபின் பார்களின் பக்கவாட்டில் இருக்கும்படி பதித்தல் வேண்டும், கரணைகளை வாய்க்காலில் பதிக்கக்கூடாது, வாய்க்காலில் பதிப்பதால் மழைக்காலமாதலால் தண்ணீர் தேங்கி கரணை அழுகல் நோய் ஏற்பட ஏதுவாகி முளைப்புதிறன் பாதிக்கப்படும்.

களைக்கொல்லி தெளித்தல்:  கரும்பில் முதல் மூன்று மாதங்கள் களைகளின் தாக்கம் அதிகமாகி பயிர் வளர்ச்சி குன்றிட வாய்ப்பாக அமைந்துவிடும். நட்ட 3 ஆம் நாள் களை முளைபதற்க்கு முன்பு தெளிக்கக்கூடிய களைக் கொல்லியான அட்ரசீன் என்ற களைக்கொல்லியை 1 kg எடுத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, தெளிக்கப்பட்ட களைக்கொல்லி காலின் பாதத்தில் படாதவாறு பின்னோக்கி நடந்து தெளித்து வரவேண்டும். இது நட்ட 30 நாட்களுக்கு கோரை, அருகு தவிர அனைத்து களைகளையும் கட்டுபடுத்தும்.

அடி உரம்:  மண் பரிசோதனைப்படி மட்டுமே உரமிடல் வேண்டும், மண்பரிசோதனை செய்ய இயலாத நிலையில் ஏக்கருக்கு 4 மூட்டை சூப்பர் பாஸ்பேட் உரத்தை பார்களின் சால்களில் தூவி நட வேண்டும். தொழுஉரம் ஏக்கருக்கு 5 டன் இடுதல், இரசாயன உரங்கள் பயிர் எடுத்துகொள்ள ஏதுவாவதுடன், மண்வளம் மேம்பாடு அடைகிறது.

உரப்பரிந்துரை  :  110 : 25 : 45 தழை, மணி சாம்பல் சத்துகளை தரக்கூடிய உரங்களை 1 ஏக்கர் பயிருக்கு இடவேண்டும்.


களை எடுத்தல்:  நட்ட 3௦ ஆம் நாள் ஏக்கருக்கு 1 மூட்டை யூரியாவை இட்டு லேசாக மண் அணைக்க வேண்டும், உடன் தண்ணீர் பாய்ச்சுதல் நல்லது.

இரண்டாவது களை எடுத்தல்:  நட்ட 6௦ வது நாளில் ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா 1 மூட்டை பொட்டாஷ் உடன் வேப்பம் புண்ணாக்கு 5௦ kg கலந்து களை எடுத்து லேசாக மண் அணைக்க வேண்டும்.

மூன்றாவது களை எடுத்தல்:  நட்ட 9௦ ஆம் நாள் 2 மூட்டை யூரியா, 1 மூட்டை பொட்டாஷ் ஏக்கருக்கு இட்டு நன்றாக மண் அணைத்தல் வேண்டும். இதற்கு மேல் தாமதப்படுத்தினால் போத்துக்கள் வளர்ந்து சர்க்கரை கட்டுமானம் பாதிக்கப்படும்.

வளர்ந்த களைகளை கட்டுப்படுத்த :  எதிர்பாராத காரணங்களால் 2 மற்றும் 3 வது களை எடுக்க முடியாமல் போனால் வளர்ந்த களைகளை கட்டுப்படுத்த METRIBUZINE 1 KG + 2-4 D 600 gm கலந்து வளர்ந்த களைகளின் மீது தெளிப்பதால் களைகள் மட்டுப்படுத்தப்படும்.

தோகை உரித்தல்:   நட்ட 5 வது மாதத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுபடுத்தவும், மகசூலை அதிகரிக்கவும், பின்பருவ நேர்த்திகளை செய்யவும் தோகை உரித்தல் அவசியமாகிறது. தோகைகளை கால்நடைத்தீவனமாகவும், கூரை வேயவும் பயன் படுத்தலாம்.

விட்டம் கட்டுதல்:  7 வது மாதத்தில் கரும்பு சாயாமல் இருக்க, எலி மற்றும் அணில் போன்றவற்றின் சேதத்தை தவிர்க்க விட்டம் கட்டுதல் அவசியம், கரும்பை வெட்டுவதும், வெட்டுக்கூலி குறையவும் வாய்ப்பு.

பயிர் வளர்ச்சி ஊக்கிகள்:  கரும்பு நட்ட 45, 60, 75 நாட்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கரும்பு பூஸ்டரை 1, 1 ½ , 2 kg அளவுகளை 200 lit தண்ணீரில் கலந்து தெளிக்க மகசூல் 2௦ சதவீதம் கூடும்.

அறுவடை :  நட்ட 11-12 மாதங்களில் கரும்பு அறுவடைக்கு வந்துவிடும். கரும்பை கைக்கோடாரி கொண்டு அடியோடு வெட்டுவதால் அடிக்கரும்பில் சர்க்கரை அளவு கூடுதலாக இருப்பதால் ஆலையின் கட்டுமானம் கூட வாய்ப்பாகும், மேலும் 5 டன்கள் கரும்பு ஏக்கருக்கு மகசூல் கூட வாய்ப்பாக அமையும். கரும்பை வெட்டியபின் தோகையை தீயிட்டு எரிக்காமல், தோகைகளை கரும்பு தோகை கம்போஸ்டாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கலாம்.மேற்கூறிய வழிமுறைகளை கையாண்டு கரும்பு மகசூலை அதிகரித்து விவசாயிகள் வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்கள்.

கோ.செந்தில்நாதன்,முனைவர்  பா.கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர்.  

வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் – 636203.

Johnny Movie Review | Top Star Prashanth | Sanchita Shetty | Vetriselvan | Thiagarajan

Thuppakki Munai Review | Vikram Prabhu | Hansika | Movie Review | Thinaboomi

ஆன்மிகம் என்றால் என்ன | Aanmeegem | Brahma Kumaris Tamil | Arivom AanmeegamTamil

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து