முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுகுளத்தூர் சார்பு நீதி மன்றத்தை நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

கடலாடி- முதுகுளத்தூர் சார்பு நீதி மன்றத்தை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி  திறந்து வைத்தார். 
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சார்பு நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசும்போது, நான் பதினாறரை ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளேன். அதனால் வழக்கறிஞர்களின் கஷ்டங்கள், பிரச்சினைகள் நன்கு தெரியும். ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யாமல் பணியாற்றுகின்றனர். இவர்களைப்போல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடாமல் பணியாற்ற வேண்டும். வழக்கறிஞர்கள் கூடுதல் நேரம் பணியாற்றி வழக்காடிகளுக்கு விரைவாக சரியான நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் அவர்களின் உரிமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த உரிமைகள் தெரிந்தால் அவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய தேவை இருக்காது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி எனக்கூறுவதுபோல், அவசர கதியில் வழங்கப்படும் நீதி புதைக்கப்பட்ட நீதியாகும். அதனால் தீர விசாரித்து சரியான நீதி வழங்க வேண்டும்.
 நீதித்துறை, நிர்வாகத்துறையினர் பல்வேறு தரப்பு மக்களுக்கும் நீதி பரிபாலனம் கிடைக்கச் சிறப்பாக செயல்பட வேண்டும். கீழ்மட்ட மக்கள் முதல் அனைத்து தரப்பினர் வரை சரியான நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். எல்லா வாதிகளுக்கும் நல்ல வழக்கறிஞர்களை தேர்ந்தெடுக்க முடியாது. அதனால் வாதிகளுக்கு சரியான தீர்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும். பெரும்பாலான மக்கள் வழக்கறிஞர் மூலம் வாதாட வசதி இருக்காது. அவர்களுக்கு இலசவ சட்ட உதவி மையம் மூலம் நீதி கிடைக்க உதவ வேண்டும். அங்கு வழங்கப்படும் ஊதியத்தை பெற்றுக் கொண்டு மக்கள் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். வழக்கை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க உதவியாக வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில் சொல்லிய கருத்தை திரும்ப திரும்பச் சொல்லி நேரத்தை வீணடிக்காமல், சரியாக எடுத்து வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையே நீதிபரிபாலனம் வலியுறுத்துகிறது. எனவே அதன்படி நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் செயல்பட வேண்டும். தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் ஐந்தாண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை 2018 மார்ச் 31க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. அதனை செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
மூத்த வழக்கறிஞர்கள் இளைய வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அதேபோல் இளைய வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்களிடம் தேவையான சட்ட அறிவுகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பேசும்போது, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடாமல் பணியாற்றும் பரமக்குடி வழக்கறிஞர்களை பாராட்டுகிறேன். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றில்லாமல், காலதாமதம் ஆனாலும் தரமான, நியாயான நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார்.
 தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், ராமநாதபுரம் சரக டிஐஜி(பொ) பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, முதுகுளத்தூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் டி.ராஜசேகர், செயலாளர் ஆர்.முருகேசன், பொருளாளர் ஆர். சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் தலைமைக்குற்றவியல் நீதிபதி டி.வி.அனில்குமார் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து