முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாருடைய ஆட்சி குதிரை பேர ஆட்சி ? 2-ஜி வழக்கின் தீர்ப்பு வரும்போது தெரியும் - மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி சூடான பதில்

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : யாருடைய ஆட்சி குதிரை பேர ஆட்சி என்பது 2 ஜி வழக்கின் தீர்ப்பு வரும் போது தெரியும் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூடான பதிலடி கொடுத்துள்ளார்.

திருச்சி, அக். 27- மதுரையில் தொடங்கி...

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 30.06.2017 அன்று மதுரையில் தொடங்கிய விழா தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
அந்த வகையில் திருச்சி ஜீ கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்தினை திறந்துவைத்தார்.

பல்வேறு திட்டப்பணிகள்

விழாவில் ரூ.212 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.457 கோடியே 31 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான 45 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 32,661 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

2-ஜி விரைவிலே தீர்ப்பு

பின்னர் அவர் விழாவில் பேசியதாவது.,

எதிர்க்கட்சித்தலைவர் நம் ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார். எப்பொழுது பார்த்தாலும், நம்முடைய ஆட்சியை குறைசொல்வது தான் வழக்கம். அவர் எப்பொழுது பார்த்தாலும் ஒரு வசனத்தை பேசுவார். இது குதிரைபேர அரசு என்று சொல்வார். யாரை சொல்வார் என்று நமக்குத் தெரியவில்லை. ஏனென்றால், விரைவிலே தீர்ப்பு வருவது உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். அப்பொழுது யாருடைய ஆட்சியிலே குதிரைபேரம் நடந்தது என்று நாட்டு மக்களுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல, இன்றைக்கு ஸ்டாலின் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருக்கின்றார். மழைக்காலங்களிலே சீதோஷ்ண நிலை மாறுகின்றது. அப்படி சீதோஷ்ண நிலை மாறுகின்றபொழுது, இன்றைக்கு பல்வேறு காய்ச்சல் பொதுமக்களுக்கு வருவது இயல்பு. பலஆண்டுகளாக இப்படித்தான் வந்து கொண்டிருக்கின்றது. மக்களும் அதற்கு தகுந்த சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இப்பொழுது டெங்கு காய்ச்சல் வந்திருக்கின்றது. அந்தக் காய்ச்சலை வைத்து அவர் பேட்டி கொடுக்கும்பொழுது, இந்த ஆட்சி டெங்கு ஆட்சி என்று பெயர் சூட்டியிருக்கின்றார். ஆகவே அவருக்கு அவ்வளவுதான் திறமை, அவ்வளவு தான் புத்திசாலித்தனம் என்றுதான் நான் நினைக்கின்றேன்.

டெங்குக்கு உடனடியாக சிகிச்சை

ஏனென்றால், காய்ச்சல் வருவது இயற்கை, அதை குணப்படுத்துவதற்கு என்ன ஆலோசனை என்று சொன்னால், அது உண்மையிலேயே எதிர்க்கட்சித் தலைவருக்கு பாராட்டிற்குரியது. அதை விட்டுவிட்டு, வேண்டுமென்றே கிண்டல் செய்வது, கேலிசெய்வது, எந்த விதத்திலே நியாயம் என்பதை இந்த நேரத்திலே நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆகவே, நம்முடைய அரசைப் பொறுத்தவரைக்கும், அம்மாவினுடைய அரசைப் பொறுத்தவரைக்கும் இன்றைக்கு விழிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைகின்ற சூழ்நிலையை நாம்உருவாக்கித் தந்திருக்கிறோம், அதற்குத் தேவையான வசதியையும் நாம் செய்துகொடுத்திருக்கிறோம், போதிய மருத்துவர்கள், செவிலியர்களைநியமித்திருக்கின்றோம். ஆகவே, இந்த டெங்கு கொசு கடித்துத்தான் டெங்குகாய்ச்சல் வருகிறது. டெங்கு கொசு நல்ல தண்ணீரில் தான் உருவாகிறது, பகலிலேகடிக்கின்றது. காய்ச்சல் வந்தவுடன்நாம் அரசு மருத்துவமனைக்கோ, தனியார்மருத்துவமனைக்கோ சென்று ரத்த பரிசோதனை செய்து, என்ன காய்ச்சல்என்பதைக் கண்டறிந்து, உடனடியாக அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாகி விடும். இது இயல்பான ஒன்று. நம்முடைய அரசைப் பொறுத்தவரைக்கும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எல்லா மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவு வழங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல, துறைசெயலாளர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமித்து, அந்த மாவட்டத்திலே எங்கெங்கெல்லாம் டெங்கு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதையெல்லாம் கண்டறிந்து, அதற்கு தீர்வு காணுகின்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றோம்.

ஒத்துழைப்பு தரவேண்டும்

டெங்கு காய்ச்சல் இன்றைக்கு படிப்படியாக குறைந்து கொண்டிருக்கின்றதுஎன்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அம்மாவினுடைய அரசு விழிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த காய்ச்சலுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே, இந்த டெங்கு கொசு நல்லதண்ணீரில் உருவாகின்றது. ஆகவே, வருகை தந்திருக்கின்ற பொதுமக்கள், கழகநிர்வாகிகள், தொண்டர்கள், நீங்கள் மக்களிடத்திலே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தாங்கள் சேமித்து வைக்கின்ற தண்ணீரை மூடிவைக்கவேண்டும். இல்லாவிட்டால், டெங்கு கொசு, அதில் முட்டையிட்டு அங்கே கொசு உற்பத்தியாகி இந்த காய்ச்சல் வருவதற்கு காரணமாகி விடும். ஆகவே, இதை தடுப்பதற்குபொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும்.

டெங்கு காய்ச்சலை தடுப்போம்

பொதுமக்களுடையஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்த்தையும் நிறைவேற்ற இயலாது. டெங்கு கொசு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்று சொன்னால், பொதுமக்களுடைய ஒத்துழைப்பு அரசுக்கு தேவை, அவர்களுடைய முழு ஒத்துழைப்புடன் டெங்கு கொசுவை முற்றிலும் ஒழிப்போம். டெங்கு காய்ச்சலை தடுப்போம். அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் சரி, அம்மாவினுடைய ஆட்சியிலும் சரி, எண்ணற்ற திட்டங்களை நாம் செயல்படுத்தியிருக்கின்றோம்.

ஒப்பிட்டுப் பாருங்கள்

அதே நேரத்திலே, தி.மு.க ஆட்சி என்ன செய்தது என்று எண்ணிப் பாருங்கள். அவர்கள் என்ன செய்தார்கள், நம்முடைய இருபெரும் தலைவர்கள் இந்த நாட்டிற்குஎன்ன செய்தார்கள் என்று ஒப்பிட்டுப் பாருங்கள். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தையேஎடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு முன்னாலே பேசிய உங்கள் மாவட்ட அமைச்சர் கூறினார். அம்மாவினுடைய ஆட்சியிலே போடப்பட்ட திட்டங்கள், அதனால் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் ஏராளம் என்று பட்டியலிட்டு சொன்னார்கள். திமுக ஆட்சியில் ஒன்றையாவது சொல்ல முடியுமா? எண்ணிப் பாருங்கள். ஆகவே, இருபெரும் தலைவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொடுத்ததன் மூலம் இந்த மாவட்டம் வளர்ச்சிப் பாதையிலே சென்று கொண்டிருக்கின்றது என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

எள்ளளவும் சிந்திக்கவில்லை

மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்திலே இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் அதில் பங்கு பெற்றது. அப்பொழுது காவிரி நதிநீர் பிரச்சினைவந்தது, அதற்காக குரல் கொடுத்தார்களா? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? இல்லை. ஆட்சி அதிகாரத்திலே, பதவி சுகத்தைக் கண்டார்கள், இந்தெந்த இலாகா வேண்டுமென்று கேட்டு பெற்றார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களைப் பற்றி எள்ளளவும் சிந்திக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி இன்றைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடிய ஒருசூழ்நிலையை உச்சநீதிமன்றத்தின் மூலமாக நமக்கு கிடைத்தது. ஆகவே, திருச்சிராப்பள்ளி மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாக இருக்கின்றது. காவிரிநீர் பாசனம் பெறுகின்ற பகுதியாக இருக்கின்றது. அந்த மக்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மூலமாக புரட்சித்தலைவி அம்மா சட்டப் போராட்டம் நடத்தி, நமக்கு தீர்வு தந்த ஆட்சி அம்மாவினுடைய ஆட்சி என்பதை சொல்லிக் கொள்ளகடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து