முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது : நிலைமையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை துவங்கியது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. மழையை சமாளிக்க தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பரவலாக மழை

தமிழகத்தில் திருச்சி நகர், மதுரை, சென்னை, ஸ்ரீவில்லிபுத்தூர், கச்சிராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மதுரையில் காலை முதல் சாரல் மழை பெய்தது. சென்னையில் அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், மேடவாக்கம், ஆலந்தூர், மடிப்பாக்கம், மாதவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை நாட்டின் அனைத்து பகுதியிலும் இருந்து நேற்று முன்தீனம் முற்றிலும் விலகியது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

வடகிழக்கு பருவ மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான அறிகுறிகள் நிலவி வருகின்றன. தற்போது கடலோர பகுதியில் தொடங்கிய மழை மற்ற பகுதியிலும் மிதமாக பெய்யக் கூடும். கடலில் இருந்து ஈரப்பதத்துடன் காற்று வீசி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். சென்னையில் இடைவெளி விட்டு மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்எச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வுகூட்டம் நடந்தது. ஆய்வு கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் 26-10-17 முதல் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1913 மூலமும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044-25367823, 25384965, 25383694, 25619206 மூலமும் வாட்ஸ்-அப் எண்கள் 9445477662 மற்றும் 9445477205 மூலமும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இக்கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் தகவல்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்து உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மாநகராட்சியின் வசமுள்ள 1,096 வாக்கி- டாக்கிகள் மூலம் தகவல் தொடர்பினை பரிமாறிக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தயார் நிலையில் பம்ப் செட்டுகள்

மாநகராட்சி வசமுள்ள 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறை வசமுள்ள 6 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 22 சுரங்கப்பாதைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்ட இடங்களில் 60 உயர் அழுத்த டீசல் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பருவ மழையின்போது தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 15 மண்டலங்களிலும் மொத்தம் 458 எண்ணிக்கையில் 5 அல்லது 7.5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தடையில்லா போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தயார்நிலையில் மீட்பு படகுகள்

மழைநீர் பெருகும் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க 109 மீட்பு படகுகளும், மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட 176 நிவாரண முகாம்களும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் 1,500 நபர்களுக்கு உணவு தயாரித்திட 4 பொது சமையல் கூடங்களும், பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திட 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்களும், 50 அம்மா குடிநீர் மையங்கள் மூலம் மழைக்காலங்களில் பாதுகாப்பான தரமான குடிநீரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து