முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சியை அழிக்க எந்த சக்தி வந்தாலும் ஒற்றுமையாக நின்று பொடிப் பொடியாக்குவோம் - திருச்சி விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஜெயலலிதாவுக்கு எதிராகவும், அவரது ஆட்சிக்கு எதிராகவும், அவதூறு பரப்பி, நம்மை அழித்து விடலாம் என்று எண்ணி, எந்த சக்தி வந்தாலும், ஒற்றுமையாக எதிர்த்து நின்று, பொடிப்பொடியாகத் தகர்த்தெறிவோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்,

தமிழுக்குப் பெருமை சேர்த்தார்

திருச்சி மாவட்டம், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

1967-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம். எம்.ஜி.ஆர். தலைக்கு குறி வைத்து, சுடப்பட்ட தோட்டா, அவரது உயிரை பறிக்க மனமின்றி, குறி தப்பி, தலைவரின் காதோறும் கழுத்தை துளைத்து, அங்கேயே தங்கி, கல்லாய், மணலாய் கரைந்து போனது. தர்மத்தாய் எம்.ஜி.ஆரின் உயிரை காப்பாற்றினார். விக்கிரமாதித்த மாமன்னன், பல வேதனைகளைத் தாங்கி, சோதனைகளைத் தாண்டி, 18 படிகளை கடந்து, மேலேறி சிம்மாசனத்தில் அமர்ந்தானாம். விக்கிரமாதித்தனாக நடித்த புரட்சித் தலைவரும், துப்பாக்கியால் சுடப்பட்டபிறகு, 17 ஆண்டுகள் பலப்பல சோதனைகளை சந்தித்து, தடைகளை உடைத்து, இடையூறுகளை பொடிப்பொடியாக்கி, வெற்றித் திருமகனாய், 1977-ம் ஆண்டு, தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் ஏறினார். தமிழகத்தின் முதலமைச்சரான எம்.ஜி.ஆர்., தமிழ் மொழிக்கு தனிப் பல்கலைக் கழகம் அமைத்து, அன்னைத் தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.
வெற்றி கொண்டார்

சத்துணவுத் திட்டம் தந்து, ஏழை எளிய மாணவச் செல்வங்களின் பசிப்பிணி நீக்கினார். மாணவச் செல்வங்கள் கல்வி பயில இலவச சீருடை, இலவச காலணி, இலவச பாடப்புத்தகம், இலவச பற்பொடி என்றும், விவசாயிகள் மனம் மகிழ விவசாயம், செழித்தோங்க, இலவச மின்சாரம் என்றும் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை, மக்கள் மனம்மகிழத் தந்தார் எம்.ஜி.ஆர். அவரே இப்படி என்றால், அவரை ஆசானாகக் கொண்டு, அரசியல் படித்த ஜெயலலிதாவை பற்றி புகழ்ந்து பேச வார்த்தைகளே இல்லை!தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்” என்பது பழமொழி. ஆனால், அந்தப் பழமொழியை மாற்றி, ஆசான் என்னும் தாய்ச் சிங்கம் பத்தடி பாய்ந்தால், அவரது மாணவச் சிங்கமான ஜெயலலிதா நூறு அடி பாய்வார் என்று நிரூபித்துக் காட்டினார். எண்ணில்லாத் திட்டங்கள் வழங்கி, தமிழக மக்களின் இதயங்களை வெற்றிக் கொண்டார் ஜெயலலிதா.
சூளூரைத்தார்

தம்முடைய சாதனைத் திட்டங்களால், மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து, 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெறச் செய்து, 32 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளுகின்ற கட்சியே, தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிக்கின்ற சாதனையைப் படைத்து, சரித்திரம் படைத்தவர் ஜெயலலிதா. தமிழக மக்களின் விருப்பத்தை ஏற்று தொண்டர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் நிலை பெற்று, தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து பணியாற்றும் என்று சட்டப் பேரவையில் ஜெயலலிதா சூளூரைத்தார். வாழுகின்ற காலமெல்லாம், மக்கள் நலம் நாடி செயல் புரிந்த, வாக்கு, தெய்வ வாக்கு. அந்த தெய்வ வாக்கின்படி, இந்த இயக்கம் அழியாது நிலை பெறவும்.ஜெயலலிதாவின் ஆட்சி, மக்கள் நலனுக்காக, தொடர்ந்து நடைபெறவும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம்.
தகர்த்தெறிவோம்

அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இன்று ஒரே குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு எதிராகவும், அவரது ஆட்சிக்கு எதிராகவும், அவதூறு பரப்பி, நம்மை அழித்து விடலாம் என்று எண்ணி, எந்த சக்தி வந்தாலும், அது எத்தனை பட்டாளம் கூட்டி வந்தாலும், அந்தத் தடைகளையெல்லாம் ஒற்றுமையாக எதிர்த்து நின்று, பொடிப்பொடியாகத் தகர்த்தெறிவோம். இந்த ஆட்சி மட்டுமல்ல, இனி வரும் ஆட்சியும் ஜெயலலிதாவின் ஆட்சியே என்று அவரது புனிதப் பாதையிலே, ஜெயலலிதாவின் நல்லாட்சியை விசுவாசத் தொண்டர்களாகிய நாம்தொடர்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து