முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீடுகளில் 5 நாட்களாக நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்தது: வருமானவரி அலுவலகத்தில் விவேக் - புகழேந்தி ஆஜர்

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் சசிகலா உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடைப்பெற்ற வருமானவரி சோதனை நேற்று நிறைவடைந்தது. சோதனையை அடுத்து விசாரணைக்காக வருமானவரி அலுவலகத்தில் விவேக் மற்றும் புகழேந்தி ஆஜராகினர்.

வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  தமிழ்நாட்டில்  சசிகலா, நடராஜன், டி.டி.வி.தினகரன், திவாகரன், நடராஜன், இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகச் சென்று சோதனையைத் தொடங்கினர். தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்தது. முதலில் 187 இடங்களில் ஆரம்பித்த இந்த சோதனை படிப்படியாக 200 இடங்கள் வரை நடைபெற்றது. நேற்று  முன்தினம் 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை இறுதிக்கட்டத்தை எட்டியது. சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை, ஜெயா தொலைக்காட்சி, அதன் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் ஜெயராமன் இல்லம், அவரது சகோதரி கிருஷ்ணபிரியா வீடு, ஜாஸ் சினிமா அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்றும் சோதனை நடைபெற்றது.

விசராணைக்கு ஆஜர்

இந்நிலையில், கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவுபெற்றது. 187 இடங்களில் 355 பேரை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள், பணம், நகை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், நகை, பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கணக்கிடும் பணியும் மறுபுறம் நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே விசாரணைக்காக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, போயஸ் தோட்ட  உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார் உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை அடுத்து அவர்கள் நேற்று நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை முன்பு ஆஜரானார்கள்.

திவாகரனுக்கு சம்மன்

தஞ்சை மாவட்டம் சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் இல்லம், அவரது கல்லூரியில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள திவாகரன் மகள் வீட்டில் நடைபெற்ற சோதனையை அடுத்து திவாகரனுக்கு வருமான வரித்துறை இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

ஜெயா டி.வி. அலுவலகம்

இதற்கிடையே, சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகத்தில் 5 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது.  ஜெயா டி.வி. அலுவலகத்திலும் 9-ம் தேதி முதல் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வந்தது. போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவி பழைய அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. 5-வது நாளாக நேற்றும் ஜெயா டிவி உள்ளிட்ட சில பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. ஜெயா டிவியில் நேற்று பிற்பகல் சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அவற்றை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது.

விசாரணைக்கு...

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் இல்லத்தில் சோதனை நிறைவு பெற்ற பின்னர், ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். வருமான வரிசோதனை முடிந்த பிறகு விவேக்கை அங்கேயே சம்மன் வழங்கி விசாரணைக்காக வருமானவரி துறையினர் அழைத்து சென்றனர். மேலும், சசிகலா உறவு வட்டாரங்களை சேர்ந்த சுமார் 200 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்திருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து