முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி : கலெக்டர், எம்பிக்கள் துவக்கி வைத்தனர்

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      பெரம்பலூர்
Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில்தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், நீரால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

 விழிப்புணர்வு

அதன் விபரம் பின் வருமாறு: மழைக்காலங்களில் பல்வேறு நோய்கள் குடிநீர் வாயிலாக பரவுவதன் காரணமாக குடிநீரை சுத்தமானதாக பயன்படுத்த பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், நீரால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாகனத்தை அண்மையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி.மருதராஜா, மா.சந்திரகாசி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.இராமச்சந்திரன், இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள்.

இந்த வாகனத்தின் மூலம் குடிநீர் வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து துண்டுபிரசுரங்களையும் வழங்குவார்கள். மேலும், தண்ணீரை சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளை முறையாக பராமரிக்கும் முறைகள் குறித்தும், மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர்கள் மற்றும் உபயோகம் இல்லாத பழைய பொருட்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் தூய்மையான குடிநீரை வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு வாரம் வியாழக் கிழமை அன்று அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் சுத்தம் செய்தல், தேவையான அளவிற்கு குளோரின் சேர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 121 கிராம பஞ்சாயத்துக்கள், 4 பேரூராட்சிகள் மற்றும் 1 நகராட்சி என 126 களநீர் பரிசோதனைப் பெட்டிகளை மாவட்ட கலெக்டர் வே.சாந்தா. நேற்று (13.11.2017) மாவட்ட ஆட்சியரகத்தில் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் பெரம்பலூர் நகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.

இந்த களநீர் பரிசோதனைக் கருவிகள் மூலமாக நாம் அருந்தும் குடிநீரில் பி.எச். காரத்தன்மை கடினத்தன்மை குளோரைடு மொத்த கரை உப்புக்கள் புளுரைடு, இரும்பு, அம்மோனியா, நைட்ரைட், நைட்ரேட்டு, பாஸ்பேட்டு மற்றும் எஞ்சியுள்ள குளோரின் உள்ளிட்ட 12 வகையான ஆய்வுகள் மேற்கொள்ள முடியும். இதன்காரணமாக குடிநீரின் தரம் குறித்து உடனடியாக அறிந்துகொள்வதுடன், குடிநீரில் உள்ள குளோரின் அளவையும் கணக்கிட்டு, தேவையான அளவிற்கு குடிநீரில் குளோரினை சேர்த்துக்கொள்ளும் வகையில் இக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து