முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்

சனிக்கிழமை, 18 நவம்பர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியதாக புகார் வந்துள்ளதை அடுத்து அதற்கு விளக்கம் அளிக்க நடிகர் சிம்பு, வடிவேலு மற்றும் திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சினிமா தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியதாக சிம்பு, வடிவேலு, திரிஷா ஆகியோர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டு இருந்தது. சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இந்த நிலையில், படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் இந்த படத்தில் நடித்த சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளார். அதில், ‘சிம்பு இந்த படத்தில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பாதிபடம் முடிந்த நிலையில் இனி நடிக்க முடியாது. இதுவரை நடித்த காட்சிகளை வைத்து படத்தை ரிலீஸ் செய்யுங்கள். மீதியை 2-ம் பாகமாக வெளியிடுங்கள் என்று கூறிவிட்டார். இதனால் 18 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும்’ என்று மைக்கேல் ராயப்பன் குறிப்பிட்டு இருந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இதையடுத்து இயக்குனர் ஷங்கர் தனது நிறுவனம் மூலம் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தை தயாரித்து வந்தார். இதற்கு வடிவேலு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:-

இந்த படத்துக்காக ரூ.3 கோடி செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பெருமளவில் பணம் செலவு செய்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் அவர் தனிப்பட்ட காரணத்தால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். இதனால் பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு நடிகர் சங்கம் மூலம் தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விக்ரம் நடிக்கும் ‘சாமி 2’ படத்தில் திரிஷாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் திடீர் என்று இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த படப்பிடிப்பு தொடர்ந்து நடத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கத்துக்கு கொடுக்கப்பட்ட புகாரில், ‘திரிஷா இந்த படத்தில் இருந்து விலகியதால் படத்தின் கதையையே மாற்றும் நிலை உள்ளது. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’. என்று குறிப்பிட்டு இருக்கிறது.

சமீபத்தில் ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞான வேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்துக்கு 3 புகார்கள் வந்துள்ளன. ‘‘தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். இப்போது நடிகர் சங்கத்துக்கு வந்த புகாரின் அடிப்படையில் சிம்பு, வடிவேலு, திரிஷா ஆகியோருக்கு நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்கள் விளக்கம் அளித்த பிறகு தவறு யார்மீது இருகிறதோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து