முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்புச்செழியனை பிடிக்க போலீஸ் தீவிரம் தேனி, ராமநாதபுரம் விரைந்தது தனிப்படை

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை,  அசோக்குமார் தற்கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க அவரது உறவினரை தேடி தனிப்படை போலீஸார் தேனி மற்றும் ராமநாதபுரத்துக்கு விரைந்தனர்.
 
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கம்பெனி ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார். அவர் மதுரையில் உள்ள அன்புச் செழியனிடம் வட்டிக் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கந்து வட்டி கேட்டு அசோக்குமாரை அன்புச்செழியன் மிரட்டியதாகவும், அவர் வீட்டு பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அசோக்குமார் கடந்த வாரம் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்னர் அசோக்குமார் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் தனது தற்கொலைக்கு அன்புச்செழியன்தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் அன்புச்செழியனை கைது செய்யவிருந்தனர்.

 இதையறிந்து கொண்ட அன்புச்செழியன் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவை மதுரை, தேனி, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் அன்புச்செழியனை தேடியது. அவர் கிடைக்காததால் சென்னை திரும்பின. இந்நிலையில் அன்புச்செழியனுக்கு அவரது உறவினர் ஒருவர் அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் அவர்தான் இவருக்கு எல்லா உதவிகளையும் செய்வதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த உறவினரை பிடிக்க தேனி மற்றும் ராமநாதபுரத்துக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து