முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினிகாந்த்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் இந்த மாதம் இறுதியில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது பற்றிய விவாதங்களும் எதிர்பார்ப்புகளும் 1996-ல் தி.மு.க.-த.மா.க கூட்டணியை அவர் உருவாக்கி ஆட்சியில் அமர்த்தியதில் இருந்து தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த மே மாதம் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து அவர்கள் மத்தியில் அரசியல் குறித்து பேசியது எதிர்பார்ப்பை மேலும் வலுவாக்கியது. “சில அரசியல்வாதிகள் எனது பெயரை பயன்படுத்தி ஆதாயம் பெற்றனர். எனது ரசிகர்களையும் அவர்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர். அமைச்சராக ஆசைப்படலாம். ஆனால் பணம் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது. நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன். நாட்டில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது. போருக்கு தயாராக இருங்கள்” என்றெல்லாம் பேசி அரசியல் எண்ணங்களை வெளிப்படுத்தினார்.

ரஜினிகாந்தின் பேச்சு அரசியலுக்கு வருவதை பிரதிபலிப்பதாக இருந்தது என்று கணிப்புகள் வந்தன. இதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர். அதன்பிறகு 2.0, காலா படங்களில் அவர் பிஸியாகி விட்டார். தற்போது அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. அடுத்து புதிய படத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அரசியலுக்கு வருதற்காகவே படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தி இருக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது.

அடுத்த மாதம் (ஜனவரி) அரசியலில் ஈடுபடும் முடிவை ரஜினிகாந்த் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவும் சமீபத்தில் இதனை உறுதிபடுத்தி இருந்தார். ரஜினிகாந்த் கட்சி பெயரை தேர்வு செய்து வருவதாகவும், அடுத்த மாதம் அறிவித்து விடுவார் என்றும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அரசியலில் ஈடுபட்டால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தற்போது இயங்கி வரும் ரஜினிகாந்தின் அலுவலகம் கட்சி அலுவலகமாக மாற்றப்படும் என்று தெரிகிறது. இந்த மாதம் இறுதியில் விடுபட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை 6 நாட்கள் சந்தித்து பேச ரஜினிகாந்த் திட்டமிட்டு இருப்பதாகவும் இதுபற்றிய நிகழ்ச்சி நிரல் பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அந்த சந்திப்பு முடிந்ததும் அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து