தேனீ வளர்ப்பு- மதிப்புக்கூட்டுப்பொருள்கள் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவியர் நேரடிப்பயிற்சி

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      ஈரோடு
Gobi 3

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் வேளாண் கல்லூரி மாணவியர் 11 பேர் கிராமத்தங்கல் திட்டத்தின் கீழ் கோபி வட்டாரத்தில் தங்கி கடந்த இரண்டு மாதங்களாக நேரடி விவசாய அனுபவங்களைக் கற்று வருகின்றனர்.
அதன்படி பல்வேறு கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை நேரடியாகச் சந்தித்து விவசாயம் செய்யும் முறைகள் பற்றியும், நவீன விவசாய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பது  குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். வேளாண தொழில் மட்டுமல்லாது பட்டுவளர்ப்பு, தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மற்றும் தேங்காய் கொப்பரை தயாரிப்பு, தேங்காய் நாரிலிருந்து கயிறு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பது குறித்தும் நேரடியாகச் சென்று நடைமுறைக்கல்வி கற்று வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக கோபியை அடுத்த தாசம்பாளையம் கிராமத்தில் இயங்கிவரும் ஜெயப்பிரகாஸ், ராஜேஸ் ஆகியோரது கயிறு தயாரிப்பு தொழிலகங்களை இம் மாணவியர் பார்வையிட்டு, தென்னை மட்டையிலிருந்து நார் உரித்து அதைப் பதப்படுத்தி கயிறாகத்தரித்து, விற்பனை செய்யும் முறைகளைக் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து கொளப்பளுர் கிராமத்தில் அமைந்திருக்கும் பார்த்திபன் என்பவருக்குச் சொந்தமான மஞ்சரி தேனி வளர்ப்புப் பண்ணைக்கு  சென்று தேனீக்களின் பண்புகள், தேன் உற்பத்தி, தேனீக்ளின் வகைகள் உள்ளிட்ட விவரங்களை நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
மேலும், தேனீ அடைகளில் தேன் சேகரம் செய்யப்படுவதைப் பார்வையிட்டனர்.  அத்துடன் தேனீ வளர்ப்புமுறைகள் குறித்துப் பயிற்சி பெற்றதுடன் அது குறித்தான நடைமுறைப் பிரச்சனைகள் பற்றியும் அறிந்து கொண்டனர்.
 இது குறித்து இந்த வேளாண் கல்லூரி மாணவியர் குழுவினர் தெரிவிக்கையில்  ‘ஏட்டுப் படிப்பை நடைமுறையில் செயலாக்கம் செய்யும் போது ஏற்படும் தடைகளையும், விவசாய விளை பொருள்களை விற்பனை செய்யும் போதும், மதிப்புக் கூட்டி விற்கும் போதும் எழும் பல்வேறு பிரச்சனைகளையும், விவசாயிகள் எதிர்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.”  என்றனர். மேலும், மண்புழு உரம் உற்பத்தி, பட்டுக்கூடு உற்பத்தி, வேளாண் காடுகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவசாய செயல்பாடுகளையும் நேரில் பார்வையிடவுள்ளதாகவும்  தெரிவித்தனர்.
இந்த நேரடிக் கள அனுபவப் பயிற்சியின் போது முன்னோடி விவசாயிகள் ரங்கசாமி, கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வட்டார தொழில் நுட்ப மேலாளர் அரவிந்தன், உதவி வேளாண்மை அலுவலர் ராஜா,  உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து