முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளாத்திகுளம் அருகே ஓடும் காரில் தவறவிட்ட 31 பவுன் நகைகள் ஒப்படைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

விளாத்திகுளம் அருகே, ஓடும் காரில் இருந்து தவறி விழுந்த 31 பவுன் நகைகள் மற்றும் பட்டு புடவைகள் மீட்கப்பட்டு, 10 மாதங்களுக்கு பிறகு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தவறி விழுந்த நகை

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூரை அடுத்த எல்.வி.புரத்தை சேர்ந்தவர் ராம சீதாராமன் (வயது.50). தொழில் அதிபரான இவர் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 25-2-2017 அன்று அவர், தனது சொந்த ஊரில் இருந்து குடும்பத்தினருடன் விருதுநகர் ரயில் நிலையத்துக்கு காரில் சென்றார். அப்போது அவரது குடும்பத்தினர், நகைகளை துணிப்பையில் வைத்து, அதனை காரின் மேற்கூரை மீது வைத்து இருந்தனர்.

விருதுநகர் ரயில் நிலையத்துக்கு செல்லும் வழியில் காரின் மேற்கூரையில் நகைகள் வைத்திருந்த துணிப்பை தவறி விழுந்தது. விருதுநகர் ரயில் நிலையத்துக்கு சென்றதும், அங்கு நகைகள் இருந்த துணிப்பை மாயமானதை அறிந்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், அந்த நகைப்பையை அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் எடுத்து, சென்னைக்கு கொண்டு சென்றார். பின்னர் அதனை திறந்து பார்த்தபோது, அதில் நகைகள், பட்டு புடவைகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் அவர் வேலை வி‌ஷயமாக வெளிநாட்டுக்கு சென்று விட்டார். அப்போது அவர், அந்த நகைகளுடன் கூடிய துணிப்பையை உரியவரிடம் ஒப்படைக்குமாறு, தன்னுடைய நண்பரான சென்னையை சேர்ந்த மாசிலானந்தனிடம் தெரிவித்தார். இதுகுறித்து மாசிலானந்தன், புதூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, நகைகளுடன் கூடிய துணிப்பையை ஒப்படைத்தார். அதில் 31 பவுன் நகைகள் மற்றும் பட்டு புடவைகள் அனைத்தும் அப்படியே இருந்தன. பின்னர் துணிப்பையில் இருந்த புடவைகள், நகைகள் தொடர்பாக ராம சீதாராமன் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி உறுதி செய்தனர். பின்னர் நகைகளுடன் கூடிய துணிப்பையை ராமசீதாராமனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து