முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முசாபர் கலவர வழக்கில் உ.பி.அமைச்சர் சுரேஷ் ராணா மீதான கைது உத்தரவு ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ :  2013 முசாபர் நகர் கலவரம் தொடர்பான வழக்கில் கடந்த நவம்பர் 15 அன்று உத்தரப் பிரதேச அமைச்சர் சுரேஷ் ராணா, பா.ஜ.க எம்.எல்.ஏ சங்கீத் சோம் மற்றும் பா.ஜ.க எம்.பி. பார்டெண்டு சிங் ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த, பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவை மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மாநில அரசால் குற்றஞ்சாட்டப்பட்டு சந்திரா பால் என்பவரால் அடையாளம் காட்டப்பட்ட, அமைச்சர் சுரேஷ் ராணா, பா.ஜ.க எம்.எல்.ஏ சங்கீத் சோம் மற்றும் பா.ஜ.க எம்.பி.பார்டெண்டு சிங் உள்ளிட்ட நால்வர் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த பிணையில் வெளி வரமுடியாத கைது உத்தரவை மாவட்ட கூடுதல் தலைமை நீதிபதி மது குப்தா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டர்களின் வழக்கறிஞர் தொடுத்துள்ள வழக்கில் அவர்கள் ஏற்கெனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு ஆலோசகர், நீதிமன்றம் அந்த கைது உத்தரவுகளை ரத்து செய்யவேண்டுமென கோரினார்.

அரசு ஊழியர்களை அவர்களது கடமைகளை செய்யவிடாமல் தடுத்து தடை உத்தரவுகளை மீறியதாலும, தவறாக கட்டுப்பாடுகளை உருவாக்கியதாலும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள முசாபர் நகர் மாவட்டத்தில் கலவரம் ஏற்படுவதற்குக் காரணமாக குற்றஞ்சாட்டப்பட்டர்கள் கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதுடன், வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் உத்தரப் பிரதேச சர்க்கரை ஆலை மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுரேஷ் ராணா உள்ளிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை விசாரிக்க மாநில அரசிடம் எஸ்ஐடி அதிகாரிகள் அனுமதி கோரி வந்தனர். இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியது.

2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. இதில் 62 பேர் உயிரிழந்தனர். 93 பேர் காயமடைந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து