முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலாவும் ஜெருசலேமிற்கு தூதரகத்தை மாற்றியது

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

ஜெருசலேம் :  அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாடும், தனது தூதரகத்தை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமிற்கு மாற்ற முடிவு செய்துள்ளது.

இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான் சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு இடையே, கடந்த 1948-ல் நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசம் வந்தது. அதன்பிறகு 1967-ல் நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் ஒருங்கிணைந்த ஜெருசலேமை நாட்டின் தலைநகராக அறிவித்தது. இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்படுகின்றன.

இந்நிலையில் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றுவதாகவும், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாகவும் அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. இதற்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே அமெரிக்காவை தொடர்ந்து மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கவுதமாலா அதிபர் ஜிம்மி மோரால்ஸ் தனது ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்துள்ளதாவது:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். இதை தொடர்ந்து டெல்அவிவ் நகரில் உள்ள கவுதமாலா தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்ற உத்தரவிட்டுள்ளேன்’’ எனக் கூறியுள்ளார்.

ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக ஐ.நா பொதுச்சபையில் சில தினங்களுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றிறப்பட்டது. 128 நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்தன. அமெரிக்காவிற்கு ஆதரவாக 9 நாடுகள் வாக்களித்தன. அதில் கவுதமாலாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து