முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் முதல்வராக விஜய்ருபானி மீண்டும் பதவியேற்றார்: விழாவில் பிரதமர் மோடி - அமித்ஷா பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

அகமதாபாத், குஜராத்தில் நேற்று பிரமாண்டமாக நடந்த விழாவில், அம்மாநில முதல்வராக விஜய் ருபானி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் என ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அமோக வெற்றி

குஜராத்தில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 182 இடங்களில், பா.ஜ.க 99 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் கூட்டணி 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சில நாட்களுக்கு முன்பு நடந்த பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக விஜய் ருபானியும் துணை முதல்வராக நிதின் படேலும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய அரசு பதவியேற்பு

இதைத் தொடர்ந்து விஜய் ருபானி தலைமையிலான புதிய பா.ஜ.க அரசு நேற்று பதவியேற்றது. காந்திநகரில் தலைமைச் செயலக வளாக மைதானத்தில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட விஜய் ருபானிக்கு, கவர்னர் ஓ.பி. கோலி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து நிதின் படேல் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இவர்களை தவிர 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பூபேந்திர சிங், கவுஷிக் படேல் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்ற பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், அமைச்சர்கள் சிலர் தோல்வியடைந்ததால், அவர்களுக்கு பதிலாக புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மோடி - அமித்ஷா

விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இதுமட்டுமின்றி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர். பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் விழாவில் கலந்து கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியுடன் குஜராத் முன்னாள் முதல்வர்கள் கேசு பாய் படேல், சங்கர் சிங் வகேலா , ஆனந்திபென் படேல் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதல்வர் எடப்பாடி கடிதம்

இந்நிலையில், குஜராத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற விஜய்ரூபானிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது., நடந்து முடிந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிபெற்ற தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் மாநில முதல்வராக பதவியேற்ற தங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது பதவிக்காலம் வெற்றிகரமாக தொடர மீண்டும் எனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து