முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாதவ் மனைவியிடம் பாக். கெடுபிடி: விதவை போல் ஆக்கப்பட்டதாக பார்லி.யில் சுஷ்மா குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: காலணியில் வெடிகுண்டு இருந்தது என்று அவர்கள் கூறவில்லை. கடவுளுக்கு நன்றி என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மக்களவையில் நேற்று கூறியுள்ளார்.

பாக். ராணுவம் கைது
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ் (வயது 47). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி ஈரான் நாட்டில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்தார் எனவும் அங்கு உளவு பார்த்ததுடன், பயங்கரவாத செயல்களை தூண்டிவிட்டார் என்றும் கூறி பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்தது. இது தொடர்பாக ராணுவ கோர்ட்டு விசாரணை நடத்தி அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இடைக்கால தடை ...
இந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், ஜாதவ் மனைவி சேத்தன்குல், தாயார் அவந்தி இருவருக்கும் ஜாதவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.  அதன்படி கடந்த 25ந்தேதி அவர்கள் இருவரும் இஸ்லாமாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேசினர்.

பாக்.கின் அடாவடி...
பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை சந்திக்க சென்ற குடும்பத்தினர் துன்புறுத்தப்பட்டனர். ஜாதவை பார்ப்பதற்கு முன் அவரது மனைவியின் வளையல், தாலியை பறித்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குல்பூஷண் ஜாதவ் மனைவியின் நெற்றியில் இருந்து பொட்டையும் அதிகாரிகள் அகற்றி உள்ளனர். மேலும் அவரது  காலணியையும் பறித்து கொண்டு மீண்டும் கொடுக்கவில்லை.

சுஷ்மா விளக்கம்...
இந்த நிலையில் மக்களவையில் இதுபற்றி பேசிய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜாதவ் குடும்பத்தினரை இரு தரப்பு ஊடகங்களும் நெருங்க கூடாது என முன்பே ஏற்று கொள்ளப்பட்டது.  ஆனால், பாகிஸ்தான் பத்திரிகை நெருங்கி வந்ததுடன் அவர்களை துன்புறுத்தியுள்ளனர்.  ஏளனமும் செய்தனர் என கூறியுள்ளார். ஜாதவின் தாயார் எப்பொழுதும் சேலை அணிபவர்.  ஆனால் சல்வார் மற்றும் குர்தா அணியும்படி வற்புறுத்தப்பட்டு உள்ளார்.  தாயார் மற்றும் மனைவி இருவரின் பொட்டு, வளையல்கள் மற்றும் மங்கலநாண்கள் ஆகியவை நீக்கப்பட்டு உள்ளன.  திருமணம் முடிந்த 2 பெண்களும் விதவைகள் போல் ஆக்கப்பட்டனர்.

கடவுளுக்கு நன்றி...
ஜாதவ் மனைவி காலணியில் வெடிகுண்டு இருந்தது என்று அவர்கள் கூறவில்லை. கடவுளுக்கு நன்றி.  பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது காலணிகளை கழற்ற சொன்னால், அவர் திரும்பும்பொழுது அதனை திரும்பி ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து