முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்யசபையில் முத்தலாக் மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி - ஒத்திவைப்பு

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ராஜ்யசபையில் எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முத்தலாக் சட்ட மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். லோக்சபாவில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று ராஜ்யசாபவில் மசோதாவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சபையில் அமளி ஏற்பட்டதால் இன்று வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபாவில் நிறைவேற்றம்
இஸ்லாமியப் பெண்களுக்கு திருமணத்தில் பாதுகாப்பு அளிக்கும் விதமாக முத்தலாக் கூறும் முஸ்லிம் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் அதிக அபராதம் விதிப்பது வரையிலான சட்டமசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி இந்த சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா கடந்த ஜனவரி 29-ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு அனைத்து கட்சியினரின் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் மசோதாவை அவசர கதியில் நிறைவேற்றக் கூடாது, நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று லோக்சபாவில் வலியுறுத்தின. எனினும் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

19 கட்சிகள் எதிர்ப்பு
இந்நிலையில் ராஜ்யசபாவில் பேசிய காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா, காங்கிரஸ், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இதனை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரினார். மேலும் சில மணி நேரங்களுக்கு முன் நோட்டீஸ் கொடுத்து விட்டு மசோதாவை தாக்கல் செய்யவும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து பேசிய பாஜகவின் அவை முன்னவர் அருண்ஜெட்லி லோக்சபாவில் மசோதாவை ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்றார்.

அவை ஒத்திவைப்பு
முத்தலாக் முறைக்கு எதிராக சட்டம் இயற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 22-ம் தேதிக்குள் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் அருண்ஜெட்லி தெரிவித்தார். எனினும் மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறத்தி வருகிறது. இதற்கு பா.ஜ.க கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜ்யசபாவில் கூச்சல் நிலவியது. தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு அதற்கு பா.ஜ.க எம்.பிக்கள் பதில் குரல் கொடுத்ததால் ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்த ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன், மீண்டும் இன்று காலை 11 மணிக்கு ராஜ்யசபா கூடும் என்று அறித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து