முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை புயல் தாக்கியதில் மூன்று பேர் பலி

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எலேனோர் புயல் தாக்கம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடல் கொந்தளிப்பு
வடக்கு ஐரோப்பிய நாடுகளை ஒட்டிய அட்லாண்டிக் கடல் பகுதியில் எலேனோர் என்ற புயல் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் நேற்று ஐரோப்பிய நாடுகளை தாக்கியது. இதில் இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பயங்கர சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

15 பேர் காயம்
பிரான்சு நாட்டில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் பாரீஸ் நகரம் கடுமையான பாதிப்பை சந்தித்தது. ஈபிள் டவர் மூடப்பட்டது. அங்கு பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலும் இதேபோன்ற நிலை நீடித்தது. ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. சாலையில் சென்ற வாகனங்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. ஆல்ப்ஸ் மலையில் மலையேற்ற குழுவினர் புயலில் சிக்கிக் கொண்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

2 பேர் பலி
இதேபோல ஸ்பெயின் நாட்டில் பாஸ்கோ கடற்கரையில் இருந்தவர்களை கடல்நீர் இழுத்து சென்றது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்தில் மணிக்கு 147 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதில் அந்த நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல ஜெர்மனியில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

சுவிட்சர்லாந்து...
சுவிட்சர்லாந்து நாடும் மோசமாக பாதிக்கப்பட்டது. லெங்க் என்ற இடத்தில் சூறைக்காற்றினால் ரெயில் தடம்புரண்டு கவிழ்ந்தது. இதில் பல பயணிகள் காயம் அடைந்தனர். சாலையில் சென்ற வாகனங்களும் சூறைக்காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் கவிழ்ந்தன. சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் நகரில் மிக அதிகமாக 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால் அங்கும் கடுமையான பாதிப்பு நிலவியது.

பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் புயல் பாதிப்பு இருந்தது. ஆனாலும் அங்கு மோசமான பாதிப்பு ஏற்படவில்லை. இங்கிலாந்து மற்றும் பிரான்சில் பல விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து