முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தலாக் தடை மசோதா பார்லி.யில் தாக்கல் வாக்கெடுப்பு நடத்த கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தக்கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை தடை செய்யும் மசோதா கடந்த வாரம் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் மசோதா வகை செய்கிறது. மாநிலங்களவையில் நேற்று இம்மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அப்போது, நன்கு பரிசீலித்து தேவையான மாற்றங்கள் செய்வதற்காக மசோதாவை தேர்வுக் கமிட்டிக்கு அனுப்பக்கோரி காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா தீர்மானம் கொண்டு வந்தார்.

அதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி, முத்தலாக் சட்ட விரோதம் என்று சுப்ரீம் கோர்ட்  கூறியுள்ளது. இதுதொடர்பாக சட்டம் நிறைவேற்றுமாறும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையிலேயே முத்தலாக் தடை மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்வுக் கமிட்டிக்கு அனுப்புவது தொடர்பாக ஆனந்த் சர்மா ஏற்கெனவே நோட்டீஸ் அளிக்கவில்லை. எனவே, இதை ஏற்கக் கூடாது என்றார்.

இதற்கு பதிலளித்த ஆனந்த் சர்மா, மசோதா அவையில் தாக்கல் செய்யப்படும்போது தீர்மானம் கொண்டு வரலாம் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தின்போது, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார். அவர் சொன்னாரா இல்லையா என்று ஆவணங்களை சரி பாருங்கள். நாடாளுமன்றம் என்பது அரசின் ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்க முடியாது என்றார்.

கடும் அமளி

எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ஜனநாயகத்தில் பெரும்பான்மையான கருத்தே ஏற்கத்தக்கது. மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார். மசோதா மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவுக்கு ஆதரவாக பா.ஜ.க உறுப்பினர்களும் கோஷமிட்டனர். தொடர்ந்து அமளி நிலவியதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, மகாராஷ்டிரா கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நண்பகலிலும் அவை ஒத்திவைக்கப் பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி,

முத்தலாக் தடை மசோதா நிறைவேறுவதை காங்கிரஸ் மறைமுகமாக தடுக்கப் பார்க்கிறது. மசோதா நிறைவேற ஆதரவு அளிப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது வெறும் வேஷம். முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுப்பதற்கான பொன்னான சந்தர்ப்பம் இருந்தது. ஆனால், காங்கிரஸின் நடவடிக்கையால் முஸ்லிம் பெண்களுக்கான அநீதி தொடர்கிறது என்றார்.

காங்கிரஸ் இரட்டை வேடம்

முன்னதாக, பா.ஜ.க எம்.பி.க்கள் வாராந்திர கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அருண் ஜேட்லி பேசும்போது, முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது. மக்களவையில் இந்த மசோதாவை ஆதரித்த காங்கிரஸ், மாநிலங்களவையில் எதிர்க்கிறது. இந்த மசோதா மீது விவாதம் நடத்த அரசு விரும்புகிறது. முத்தலாக் மசோதாவை கருத்தொற்றுமை அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்றார்.

நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் அனந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளுடன் அரசு பேசி வருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்க வகை செய்யும் மசோதா, திருத்தங்களுக்கு பிறகு மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து