திருப்பதி கோவிலில் நெரிசலில் சிக்கி குழந்தை பலி

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      ஆன்மிகம்
tirupati 2017 04 14

திருமலை, ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளியை சேர்ந்த அப்பாராவ் என்பவரது மகள் நட்சத்திரா(2). திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அப்பாராவ், குழந்தைகளுடன் கடந்த 28ம் தேதி திருப்பதிக்கு வந்தவர், அலிபிரியில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வந்தனர். 29ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்பாராவ் தம்பதியினர் சாமி தரிசனம் செய்ய வைகுண்டம் வழியாக சென்றனர்.

அறியாத பெற்றோர்

கோவில் சன்னதி உள்ளே சென்ற போது கூட்டம் அதிகமாக இருந்ததால் விரைவாக செல்லும்படி அங்கிருந்த தேவஸ்தான ஊழியர்கள் இழுத்து தள்ளினர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தை நட்சத்திராவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் மயக்கம் ஏற்பட்டு குழந்தை கண்களை மூடியது. இதையறியாத பெற்றோர்  குழந்தை தூங்கியதாக எண்ணி சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தனர்.

நீண்ட நேரமாகியும் குழந்தை நட்சத்திரா கண் விழிக்காததால் குழந்தையை எழுப்பி உள்ளனர். ஆனால் குழந்தை எழாததால் திருமலையில் உள்ள தேவஸ்தான அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து பல மணி நேரமாகி விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது,

கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தை இறந்ததாக கூறியது குறித்து இதுவரை எங்களுக்கு எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை என்றனர். கோவிலுக்குள் குழந்தை இறந்ததற்கான பரிகார பூஜைகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா என்பதால் ஆகம விதிகளுக்காக அதிகாரிகள் இந்த விவகாரத்தை மூடி மறைத்திருப்பார்கள் என்று பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து