ஆதார் விவரங்கள் கசிவது எப்படி? மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      தமிழகம்
GK Vasan 2017 8 20

சென்னை : ஆதார் அட்டை தொடர்பான விவரங்கள் எப்படி கசிகிறது என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆதார் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்திய பா.ஜ.க. அரசு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தினால் பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் ஆதார் அட்டையில் உள்ள தனிநபர் விவரங்கள் பொதுவாக, வெளிப்படையாக கசிந்துவிடாமல் இருப்பதை தொடர் கண்காணிப்பின் மூலம் உறுதி செய்திருக்க வேண்டும்.


ஆனால் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை பாதுகாப்பதில் முழுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுகிறது. இதனை மத்திய அரசு மறுப்பது ஏற்புடையதல்ல.

காரணம் ஏற்கனவே ஆதார் அட்டை தொடர்பாக ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டதாக கூறும் மத்திய அரசு, கடந்த 2017 ல் - கோடிக்கணக்கானவர்களின் ஆதார் எண்களின் விவரங்கள் அரசு இணையத்தளம் மூலம் கசியாமல் பார்த்திருக்க வேண்டும்.

தற்போது 'தி ட்ரிப்யூன்' நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் ஆதார் எண்ணின் விவரங்களை யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது பொது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இப்படி யார் வேண்டுமானலும் ஆதார் எண்ணின் விவரத்தை பெற முடியும் என்றால் அந்த விவரங்களை பெறும் தீயவர்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஆகியோர் ஆதார் எண்ணின் விவரங்களை தவறாக பயன்படுத்தி பொது மக்களுக்கும், நாட்டிற்கும் தீங்கினை விளைவிப்பார்கள்.

மேலும் ஆதார் அட்டை தொடர்பாக பாதுகாப்பற்ற நிலையை வெளியிட்ட பத்திரிக்கை மீது நடவடிக்கை என்ற பெயரில் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது நியாயமில்லை. அதற்கு பதிலாக ஆதார் அடையாள ஆணையம் ஆதார் அடையாள எண்ணின் தகவல்களை கசியவிடாமல் பார்ப்பதற்கு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும்.

ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தில் பொது மக்களை சிரமத்திற்கு உட்படுத்தாமல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு பொது மக்களிடம் ஆதார் அட்டையை வாங்குவதற்கு வற்புறுத்தாமல், கட்டாயப்படுத்தாமல், கால அவகாசம் கொடுத்து - தனி மனித அடையாளங்களை பதிவு செய்யும் போது அந்த விவரங்களை கண்டிப்பாக முழு பாதுகாப்போடு வைத்திருக்க வேண்டும்.

எனவே எச்சூழலிலும் ஆதார் அட்டையின் விவரங்கள் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதற்கு மத்திய அரசு தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து