போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      தமிழகம்
cm edapadi request 2018 1 9

சென்னை : போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபையில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி மற்றும் சுயேச்சை உறுப்பினர் தினகரன் ஆகியோர் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தவறான கருத்தை...

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

எதிர்க்கட்சித் துணைத்தலைவர், அனுபவம் மிக்கவர். ஆகவே எப்படி எப்படியோ பேசி ஒரு தவறான கருத்தை இங்கே பதிய வைத்திருக்கின்றார். முதல்வருக்கு இதில் ஆர்வமில்லையா? என்று ஒரு கேள்வியை எழுப்பியிருக்கின்றார். அது தவறு. நீங்கள் பேசுகின்ற பொழுது, முதல்வர் ஏன் முன்வரவில்லை என்ற கேள்வியை கேட்டீர்கள். நான் ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் போக்குவரத்துத்துறை அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்து பேசுகின்ற போது என்னிடம் பேசி விட்டுச் சென்று தான், எங்களுடைய கருத்தின் அடிப்படையில்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆகவே, முதல்வர் சொல்லித்தான் அவர் அந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 2.44 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தந்தார்.

ஆகவே, முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சொல்வது தவறானது.

எங்கள் நிலைப்பாடு

முதல்வர் என்ற முறையில் ஊழியர்களை மதிக்கக்கூடியவன். உழைப்பவர்களை மதிக்கக்கூடியவன். ஆகவே தான், 11 முறை போக்குவரத்துத் துறை அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்து பேசி முடிவெடுத்திருக்கின்றார். ஒரு சுமூகமான நிலை ஏற்பட வேண்டுமென்பதுதான் அனைவருடைய விருப்பம். அதைத்தான் நாங்களும் தெரிவித்திருக்கின்றோம். ஆகவே, எதிர்க்கட்சித் தலைவரும், துணைத்தலைவரும் இதை நன்கு ஆலோசனை செய்ய வேண்டும். போக்குவரத்துக் கழகத்தினுடைய நிதிநிலைமை அவர்களுக்கு நன்றாக தெரியும். தற்போது இருக்கின்ற நிலையை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். உங்களுடைய ஆட்சியிலேயே, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி ரூ.922 கோடி பாக்கி வைத்து விட்டு சென்றிருக்கின்றீர்கள். தற்போது இருக்கின்ற சூழ்நிலையை கருத்தில்கொண்டு  2.44 மடங்கு ஊதிய உயர்வு வழங்கவேண்டுமென்று முடிவெடுத்து, அது அறிவிக்கப்பட்டு, அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

பணிக்கு திரும்புங்கள்

ஆகவே, எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், உறுப்பினர்களும் இதில் உதவிகரமாக இருக்க வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். ஏனென்றால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்கு உடனே திரும்ப வேண்டும் என்று இரண்டு முறை ஆணை பிறப்பித்துள்ளார்.

அதையெல்லாம் மதித்து, இருக்கின்ற நிலைமையை உணர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடிய நிறுவனமாக போக்குவரத்துக் கழகம் இருக்கின்ற காரணத்தினாலே, எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப் போல, மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்குச் செல்பவர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையெல்லாம் உணர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற பிரதிநிதிகளிடம் எடுத்துச் சொல்லி, தொழிற்சங்க பிரதிநிதிகளும், அதோடு போக்குவரத்துத் தொழிலாளர்களும் பணிக்குத் திரும்ப வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து