முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகையில்லா போகி பண்டிகை கொண்டாட தி.மலை கலெக்டர் கந்தசாமி வேண்டுகோள்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மாவட்ட மக்களுக்கு போகி மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்அறுவடை திருநாளை தமிழர்கள் பொங்கல் திருநாளாக தொன்று தொட்டு கொண்டாடி வருகின்றனர். பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகையாக பழைய கழிதலும் புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம்.

பொங்கல் திருநாள்

இந்நாளில் தமிழர்கள் திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளை திருஷ்டிக்காக எரிப்பதும் வீடுகளை சுத்தம் செய்து கோலமிட்டு கொண்டாடுவது வழக்கம். போகி அன்று பழைய சிந்தனைகளையும் செயல்களையும் தவிர்ப்பது புதிய சிந்தனைகள் மற்றும் செயல்திட்டங்களை துவக்க வேண்டும் என்ற நோக்கில் பழைய கழிதலும் புதிய புகுதலுமென நம்தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இப்போகி பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்களை எரிக்கும் பழக்கமாக மாறிவந்துள்ளது. இத்தகைய பழக்கம் பெரும் நகர்புறங்களில் மட்டுமின்றி சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் வேறு விதமாக கடைபிடிக்கப்பட்டு போகி அன்று தங்களிடமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள் பிளாஸ்டிக் மற்றும் பிற இதர தேவையற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய செயற்கை பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப் புகைகளான கார்பன் மோனாக்ஸைடு , நைட்ரஜன் ஆக்ஸைடுகள் கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின் மற்றும் நச்சுத்துகள் காற்றில் கலந்து சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. இதன்மூலம் கண், மூக்கு, தொண்டை, தோல், மூச்சுத்திணறல், மற்றும் இதர உடல்நலக்குறைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மார்கழி மாத தட்பவெட்ப நிலையும் பழைய பொருட்களை எரிப்பதால் அடர்த்தியான புகை மூட்டம் ஏற்பட்டு நீண்டநேரம் நிலைத்து நிற்பதால் பார்க்கும் திறன் குறைக்கப்பட்டு ஆகாயம, சாலை, ரயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டு விபத்துஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே இப்போகி திருநாளில் நாம் வாழ்வும் வளமும் மேம்பட பழைய பொருட்கள் எரிப்பதனை தவிர்த்து அதனை மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள், மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து தங்களது உள்ளாட்சி அமைப்பு துப்புறவு பணியாளரிடம் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இப்போகி திருநாளில் புதிய சிந்தனைகளையும் செயல்திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தி.மலை மாவட்ட மக்களுக்கு போகி மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து