முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா மாவட்டங்களில் பயிர்களை காப்பாற்ற காவிரி தண்ணீரை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி உறுதி

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : காவிரி டெல்டா மாவட்டஙகளில் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் பெற்று தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் தி.மு.க உறுப்பினர் சந்திரசேகரன் கவனஈர்ப்பு தீ்ர்மானத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் வருமாறு:-

12.83 லட்சம் ஏக்கர்...

காவிரி டெல்டா படுகை மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் கரூரில் நெற்பயிரானது சம்பா மற்றும்தாளடி பருவத்தில் சுமார் 14.93 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றது. நடப்பு 2017-18-ம் ஆண்டில், சம்பா பருவ சாகுபடிக்காக 2.10.2017 அன்று மேட்டூர் அணைதிறக்கப்பட்டது. திறக்கப்பட்ட பாசன நீரைக் கொண்டும், வடகிழக்கு பருவ மழையினைக்கொண்டும், நேரடி நெல் விதைப்பினை ஊக்குவிக்கும் வகையில் 41.15 கோடி ரூபாய் நிதிஒதுக்கீட்டில் சம்பா தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுப்புத் திட்டத்தினைப்பயன்படுத்தி, இது வரை 12.83 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 19 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டும். எஞ்சியுள்ள 12.64 லட்சம் ஏக்கர் பரப்பில், தற்போது சுமார் 4.64 லட்சம் ஏக்கர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

111 டிஎம்சி தண்ணீர்...

மீதமுள்ள 8 லட்சம் ஏக்கர் நெற்பயிரில், சுமார் 2.15 லட்சம் ஏக்கர் நிலம் நிலத்தடி நீரினை ஆதாரமாகக் கொண்டுள்ளது. எஞ்சியுள்ள 5.85 லட்சம் ஏக்கர் நெற்பயிரினை முழுமையாக அறுவடை செய்ய 26.75 டிஎம்சி நீர் தேவையாக உள்ளது. 3 லட்சம் ஏக்கர் பரப்பிற்கு ஒருமுறை பாசனமும், 2.85 லட்சம் ஏக்கர் பரப்பிற்கு இருமுறை பாசனமும் அவசியமாகிறது. தற்போது மேட்டூர் அணையில் நீரின் அளவு 21.70 டிஎம்சி ஆக உள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டின்படி, கர்நாடக அரசு, ஆண்டுதோறும் தமிழ் நாட்டிற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்கவேண்டும். இது நாள் வரை, 111 டிஎம்சி தண்ணீர் தான் வழங்கியுள்ளது. எஞ்சியுள்ள 81 டிஎம்சி தண்ணீர்  2018 மே மாதத்திற்கு முன்பாக வழங்க வேண்டியுள்ளது.

தொடர் நடவடிக்கை....

தீர்ப்பாய ஆணையின்படி, தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மீதமுள்ள நீரைப் பெறுவதற்கு கர்நாடக அரசிடம் நேரடியாகவும், மத்திய அரசு மூலமாகவும்,தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தவிர, உச்ச நீதிமன்றத்தின் மூலம் நிவாரணம் பெற தொடர்ந்துநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகப்பட்டினம்மாவட்டத்தில் மழை பெய்திருக்கின்றது. மேலும், கால்வாய்களில் பகிர்ந்து அளிக்கப்படும் பாசனநீரினை சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்திட வேண்டும் என்று இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

கிடைக்கவில்லை ...

அமராவதியிலே நான்கு அரசாணை வெளியிட்டதாக சொன்னார்கள். நீர் இருக்கின்ற அளவு பொறுத்துதான் தண்ணீர் திறந்துவிடமுடியும். அதையெல்லாம் கருத்திலே கொண்டுதான், பெய்கின்ற நீரை அளவாக கொண்டு எந்தெந்த வாய்க்காலில் எவ்வளவு தண்ணீர் விடவேண்டும் என்று முறைப்படுத்தி அதற்குதக்கவாறு அரசு திறந்து விடுகிறது. விவசாயிகளின் நலன் கருதி இருக்கின்ற நீரினுடைய அளவைவைத்துதான் அரசு அதை வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, நமக்கு கிடைக்க வேண்டியநீர் கிட்டத்தட்ட கர்நாடக அரசு 81 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இந்த மே மாதத்திற்குள். எவ்வளவோ போராடினோம், இன்னும் கிடைக்கவில்லை.

4 வாரத்தில் தீர்ப்பு

நான் குறிப்பிட்டவாறு அரசு தொடர்ந்து மத்திய அரசின் மூலமாகவும், நேரடியாகவும் கர்நாடக அரசிற்கு அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்றத்திலும் இடைக்கால மனு தாக்கல் செய்தோம். இன்னும் நான்கு வாரத்திலே நம்முடைய காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். ஆகவே, அரசை பொறுத்தவரை விவசாயிகளுக்கு தண்ணீர் பெற்றுதருவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து