முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவோம்: அதிபர் டிரம்ப் கருத்து

வெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் சில மாற்றங்களைச் செய்தால் மீண்டும் அதில் இணைய வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 டிசம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஐ.நா. மாநாட்டில், பருவநிலை ஒப்பந்த வரைவு வெளியிடப்பட்டது. இதற்கு 190-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல் அளித்தன. இந்த நூற்றாண்டில், புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டால், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேர வாய்ப்புள்ளது” - டொனால்டு டிரம்ப்.

இதில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பெரும்பாலான நாட்டின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் 2016 நவம்பர் 4-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பாதகமாக இருப்பதாகக் கூறி, அதில் இருந்து வெளியேறுவதாக கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி டிரம்ப் அறிவித்தார். இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நார்வே நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க், டிரம்பை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறும்போது, “பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் பிரச்சினை இல்லை. அதில் உள்ள சில அம்சங்கள் எங்களுக்கு பாதகமாக உள்ளன. குறிப்பாக எங்கள் நாட்டில் அதிக அளவில் கிடைக்கும் காஸ், நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயைப் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கிறது. இதனால் தொழில் துறை கடுமையாக பாதிக்கும். எனவே, அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டால், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேர வாய்ப்புள்ளது” என்றார்.

மற்றொரு கேள்விக்கு டிரம்ப் கூறும்போது, “ரஷ்யா அல்லது சீனா அல்லது இந்தியா அல்லது உலகில் உள்ள எந்த ஒரு நாட்டுடனும் இணைந்து பணியாற்றுவது நல்ல விஷயம்தான்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து