முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் திருநாளையொட்டி 1,686 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் - முதல்வர் எடப்பாடி உத்தரவு

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பொங்கல் திருநாளையொட்டி 1,686 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதல்வர் பதக்கங்கள்...

தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலைகளில் 1500 பணியாளர்களுக்கு‚ தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

பணிப்பதக்கங்கள்...
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர்  கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை வார்டர்கள் (ஆண்கள்) 60 பேர்களுக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு மாதாந்திர பதக்கப்படி அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப 2018 பிப்ரவரி 1ம் தேதி முதல் வழங்கப்படும் . இவர்கள் அனைவருக்கும் காவல் துறை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இயக்குநர், மற்றும் சிறைத்துறை தலைவரால் மாவட்டத் தலைநகரங்களில் பின்னர் நடைபெறும் அரசு விழாக்களில் பதக்கங்கள் வழங்கப்படும்.
ரொக்க தொகை அறிவிப்பு
மேலும், காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய் படைப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் ஆக மொத்தம் 6 அதிகாரிகளுக்கு அவர்களது தொழிற்சிறப்பு மற்றும் மாசற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில்  ‘தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது. இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்க தொகையாக காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலையில் ரூபாய் 4 ஆயிரமும், சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் ரூபாய் 6 ஆயிரமும், காவல் துணை கண்காணிப்பாளர் நிலையில் ரூபாய் 10 ஆயிரமும் வழங்கப்படும். இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் மேற்படி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு,  முதலமைச்சரால் பதக்கங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து