முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டு மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று சீரும்-சிறப்பாக வாழ வேண்டும் - முதல்வர் எடப்பாடி பொங்கல் வாழ்த்து

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பொங்கல் திருநாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில்,

பொங்கல் பரிசு...

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலக மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றிடும் திருநாளாகவும், உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் இன்புற்று கொண்டாடி மகிழ்ந்திட தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி சிறப்பித்துள்ளது.

எண்ணற்ற திட்டங்கள்...

உழன்றும் உழவே தலை என்று வள்ளுவப் பெருந்தகை வேளாண்மையின் சிறப்பை கூறுகிறார். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வேளாண் பெருமக்களின் வாழ்வு வளம் பெறும் வகையில், தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திட, ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, விவசாயிகளுக்கு மானிய விலையில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் வழங்குதல், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், மண் ஆய்வின்படி உரமிட்டு உற்பத்தியை பெருக்கிட விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்குதல், தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை வாயிலாக விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகள் வழங்குதல், விவசாயத்திற்கு அடித்தளமான நீர்வள ஆதாரங்களை தூர்வாரி மேம்படுத்திடும் வகையில் குடிமராமத்து திட்டம், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் தூர்வாரும் போது கிடைக்கும் வண்டல் மண்ணை இயற்கை உரமாக பயன்படுத்துவதற்காக விவசாயிகள் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி, வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர் துடைத்திடும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 5318.73 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தது, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்தது, பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் 2980 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுத்தது, போன்ற எண்ணற்ற திட்டங்களை விவசாயப் பெருமக்களின் நல்வாழ்விற்காக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

வாழ்த்துக்கள்...

அறுவடைத் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்தி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் நல்வாழ்த்துகளைத் உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த வாழ்த்து செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து