முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று காணும் பொங்கல்: மெரினா கடலில் குளிக்க தடை

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, காணும் பொங்கலுக்கு மெரினாவில் மக்கள் கடலுக்குள் இறங்குவதை தடுக்க போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடலில் இறங்கி குளிக்கவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆசி பெறுவது கட்டாயம்

பொங்கல் பண்டிகையின் நிறைவு நாள் கொண்டாட்டமாக இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கல் என்பது பெற்றோர், உறவினர்கள் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆசி பெறும் தினமாகும். ஆனால் தமிழகம் முழுவதும் காணும் பொங்கலை 99 சதவீதம் பேர் பொழுது போக்கு தினமாகவே கொண்டாடுகிறார்கள். உறவினர்கள், நண்பர்கள் ஒன்று திரண்டு சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியோடு காணும் பொங்கலை கொண்டாடுவதை காலம் காலமாக வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்கள் தவிர காணும் பொங்கல் தினத்தன்று பெரும்பாலானவர்களுக்கு கை கொடுப்பது கடற்கரை சுற்றுலா தலங்கள்தான். சென்னை வாசிகளுக்கு மெரினா கடற்கரையும், பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையும் காணும் பொங்கலுக்கு கை கொடுத்து வருகின்றன. சென்னை மக்கள் குடும்பத்தோடு காணும் பொங்கலை கொண்டாட கடற்கரை பகுதிகளுக்கு லட்சக்கணக்கில் படையெடுப்பார்கள்.

தடுப்புகள் அமைப்பு

அண்ணா நினைவிடத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை கடற்கரை மணல் பகுதியில் மக்கள் திரண்டிருப்பார்கள். காணும் பொங்கல் தினத்தில் உற்சாக மிகுதியில் சிலர் கடலுக்குள் சென்று குளிப்பதும், விளையாடுவதும் எல்லை மீறி செல்வதால் விபரீதமாகி உயிரிழப்பு ஏற்பட்டு விடுகிறது. காணும் பொங்கலுக்கு மெரினாவில் மக்கள் கடலுக்குள் இறங்குவதை தடுக்க போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் தலைமையில் நடந்த போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் காணும் பொங்கல் அன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

15,000 போலீஸ் குவிப்பு

அதன் அடிப்படையில் மெரினாவில் கல்லுக்குட்டை முதல் கலங்கரை விளக்கம் வரை சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடல் நீருக்குள் யாரும் இறங்கி விடாத அளவிற்கு இந்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகிறார்கள். போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி யாரும் உள்ளே செல்லாமல் இருப்பதை தடுக்க 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துமீறினால் நடவடிக்கை

கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அவர்கள் ‘பைனா குலர்’ மூலம் கடலுக்குள் யாராவது இறங்குகிறார் களா? என்பதை பார்த்து உடனடியாக வாக்கி டாக்கி மூலம் தற்காலிகமாக அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பார்கள். போலீசாரின் தடையை மீறி அத்துமீறும் இளைஞர்கள் மீது நடவடிக்கையில் இறங்கவும் தயாராக இருப்பார்கள். உழைப்பாளர் சிலைக்கு பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 கட்டுப்பாட்டு அறைகள் காணாமல் போகும் குழந்தைகளை மீட்டு ஒப்படைப்பதற்காக செயல்படுகிறது. உழைப்பாளர் சிலையில் இருந்து மெரினா பகுதிக்கு செல்ல ஒரு வழியும், வெளியே வருவதற்கு ஒரு வழியும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வளையம்

மெரினாவில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் வகையில் கைகுழந்தைகளின் கையில் வளையம் கட்டப்படும். அந்த வளையத்தில் பெற்றோர், போன் நம்பர், அண்ணா சதுக்கம், மெரினா போலீஸ் நிலையம் போன் எண், அவற்றின் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். தவறி செல்லும் குழந்தைகள் கையில் உள்ள போன் எண்களுக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தால் விரைவாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்க வசதியாக இருக்கும் என்பதால் இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்படுகிறது.

ஹெலிகாப்டரில் கண்காணிக்க ஏற்பாடு

போலீஸ் கமி‌ஷனருடன் தென்சென்னை கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெய்ராம், துணை கமி‌ஷனர் மனோகரன் மற்றும் திருவல்லிக்கேணி உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு வசதியாக ஹெலிகாப்டரில் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் திரண்டு உள்ள மக்களை போலீசார் ஹெலிகாப்டரில் பறந்தபடி நவீன கருவிகள் மூலம் கண்காணிப்பார்கள். ஹெலிகாப்டரில் இருந்து தெரிவிக்கப்படும் தகவல்களுக்கு ஏற்ப கடற்கரையில் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் செயல்படுவார்கள்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி பாம்பு பண்ணை, மாமல்லபுரம் கடற்கரை போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்பிற்காக காஞ்சீபுரம் மாவட்ட போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர், மீனவ நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

மாமல்லபுரம் கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக 300 மீட்டர் தூரத்துக்கு சவுக்கு கம்பால் தடுப்பு கட்டப்பட்டுள்ளது. பழவேற்காடு கடலில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள் என்பதால் அங்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பொன்னேரி டி.எஸ்.பி.ராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து