முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள்: அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற சூளுரை ஏற்போம் - அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மடல்

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் சூளுரை ஏற்போம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளனர்.

தமிழகம் முழுவதும்...

அ தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது:–

எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழாவினை உலகெங்கும் கொண்டாடி மகிழும், அ தி.மு.க. உடன்பிறப்புகள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளும், வணக்கங்களும் உரித்தாகுக. தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில், அவர் தோற்றுவித்த மக்கள் பேரியக்கமான அண்ணா தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் இருந்திட வேண்டும்; அதற்கேற்ப நம்முடைய அரசியல் பயணமும், பணிகளும் அமைந்திட வேண்டும்’’ என்று அம்மா சூளுரைத்தவாறு, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அவருக்கு செலுத்தும் நன்றிக் காணிக்கையாக தமிழகம் முழுவதும் கொண்டாடி பெருமிதம் அடைகிறோம். எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம் பெற்ற தமிழக மக்களின் நலம் பேணி, எண்ணில்லா அரும் பணிகளை நடைமுறைப்படுத்தும் நல்லாட்சியை தமிழகத்தில் நிலைபெறச் செய்த மகிழ்ச்சியோடு, புரட்சித் தலைவரின் பிறந்த நாளை நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

ஜெயலலிதா தியாகத்தால்...

அம்மா தன்னுடைய உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் ஓய்வின்றி ஒவ்வொரு நாளும் உழைத்ததன் விளைவாகவும், குறிப்பாக, 2016-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தன்னுடைய உடல் நலனைவிட அண்ணா தி.மு.க.வின் வெற்றியே இன்றியமையாதது என்று பாடுபட்டதாலும் கிடைத்த அமோக வெற்றியால் தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமைந்தது. அம்மாவின் தியாகத்தால் மலர்ந்த இந்த நல்லாட்சியை, அம்மாவின் மறைவிற்குப் பிறகு அபகரிக்க சிலரும், கவிழ்த்திட சிலரும் செய்த சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் முறியடித்து, கழகத்தின் நலனே தொண்டர்களின் நலன், கழகத்தின் வெற்றியே தொண்டர்களின் வெற்றி; நம்மைவிட கழகமே பெரியது, கழகத்திற்காக வாழ்வதே நமக்குள்ள பெரும் சிறப்பு’’ என்று புரட்சித் தலைவி அம்மா மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியதை மனதில் ஏற்று, கழக ஆட்சியை நிலைபெறச் செய்திருக்கிறோம்.

நன்றிக்கடன்....

அம்மா, தனக்குப் பின்னும் பல ஆண்டுகள் அதி.மு.க.வின் ஆட்சி தொடரும் என்று சட்டமன்றத்தில் சூளுரைத்தார். எம்.ஜி.ஆரின் பேரியக்கத்தை ஒற்றுமை உணர்வோடு கட்டிக் காத்து, வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்வது தான், ஓர் ஆசானாக, அன்புத் தாயாக, அளவில்லாக் கருணை கொண்ட தெய்வமாக, நம்மையெல்லாம் வழிநடத்தி வந்த அம்மாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை கழக உடன்பிறப்புகள் அனைவரும் நினைவில் கொண்டு பணியாற்றுவோம். எம்.ஜி.ஆரின் 10 ஆண்டு கால கழக அரசு, தமிழக மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் ஆற்றிய பணிகளை நினைவில் கொண்டு, அந்த மாபெரும் தலைவர் வகுத்தளித்த பாதையிலேயே, அம்மா உருவாக்கிய அம்மாவின் அரசும் தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

சாதனைகள்...

எடுத்துக்காட்டாக, தமிழ் மொழிக்கென தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அம்மா அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தைஇரு மடங்காக உயர்த்தி, 2,000 ரூபாய் வழங்க ஆணையிட்டார். மேலும், உலகப் பொது மறையாம் திருக்குறளை சீனம், கொரியா மற்றும் அரபு மொழியிலும், பாரதியார் மற்றும் பாரதிதாசன் பாடல்களை சீனம் மற்றும் அரபு மொழியிலும், மொழி பெயர்த்து வெளியிடச் செய்து, தமிழ் மொழியின் புகழை பரப்பினார். எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா உருவாக்கித் தந்த பாதையில் நடைபோட்டு, அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்து தமிழ் மொழி குறித்த ஆய்வினை பலரும் மேற்கொள்ள ஏதுவாக, 10 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கியதில் நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம்.

தொடர்ந்து நடை...

இதைப் போல, எம்.ஜி.ஆரும், அம்மாவும் விரும்பியவாறு தமிழக மக்களுக்கு இன்னும் பல பணிகளை ஆற்ற, கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதியினை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். எம்.ஜி.ஆர். தோல்வி அறியாத சாதனையாளர். தன்னுடைய அரசியல் வாழ்வை மட்டுமல்லாமல், கலையுலக வாழ்வையும் கொள்கை சார்ந்த வாழ்வாக வாழ்ந்தவர். தனக்குப் பின் கழகத்தை வழிநடத்த, தலைமைப் பொறுப்புக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் அம்மாவுக்கு அளித்த சிறப்புக்கு உரியவர். வேறு எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத பெருமையாக ‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’’ என்று வாழ்ந்த இரு பெரும் தலைவர்களால் பேணி வளர்க்கப்பட்ட இயக்கம் நம்முடைய அண்ணா தி.மு.க. என்னும் பேரியக்கம். இந்த இயக்கம், புரட்சித் தலைவரிடம் அரசியல் பாடம் பயின்ற அம்மாவின் தலைமையில் எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி கழகத் தொண்டர்களின் நலன்களையும், அவர்களது உணர்வுகளையும் மட்டுமே முன்னிறுத்தி நடைபோட்டதைப் போல, மக்கள் பணி, கழகத்தின் உயர்வு, கழகத் தொண்டர்களின் உணர்வு இவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து நடைபோடும்.

வெற்றிக்கு சூளுரை

எம்.ஜி.ஆரின் தலைமையிலும், அம்மாவின் தலைமையிலும், எப்பொழுதும் கட்டுப்பாட்டோடும், கடமை உணர்வோடும் பணியாற்றி வந்த நாம், அதே உணர்வோடும், கட்டுப்பாட்டோடும் கழகப் பணிகளை ஆற்றுவோம்.எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் கழகம் மகத்தான வெற்றி பெறும் வகையில் நாம் அனைவரும் பணியாற்றுவோம் என்று புரட்சித் தலைவரின் பிறந்த நாள் விழா நேரத்தில் சூளுரை ஏற்போம்.  இவ்வாறு அ தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து