முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை முதல்வர் - துணை முதல்வர் துவக்கி வைத்தனர்

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

உறுதி மொழி ஏற்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து வருகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும்,பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று காலை 9 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினர். முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிமொழியை வாசிக்க துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் திரும்ப சொல்லி உறுதிமொழியை ஏற்றனர். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு துவங்கியது.

துவக்கி வைத்தனர்...

வாடிவாசல் முன்பிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல் ஜல்லிக்கட்டு காளையை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர். பின்னர் வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன், பாஸ்கரன், கலெக்டர் வீரராகவராவ், எம்.பி.க்கள் ஆர்.கோபாலகிருஷ்ணன், அன்வர்ராஜா, பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ்,நீதிபதி, பெரியபுள்ளான், எஸ்.எஸ்.சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.தமிழரசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் மா.இளங்கோவன், அலங்காநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜூலான்பானு, பேரூராட்சி உதவி இயக்குனர் விஜயலெட்சுமி, செயல் அலுவலர் இப்ராகிம் ஷா மற்றும் விழா கமிட்டியினர் ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர். சுமார் 1 மணி நேரம் முதல்வரும், துணை முதல்வரும் ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர். பின்னர் 10 மணியளவில் அலங்காநல்லூரில் இருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.

பாய்ந்த காளைகள்...

அலங்காநல்லூர் கோட்டை முனியாண்டி கோவில் திடல் முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.  வாடிவாசல் முன்பு 15 மீட்டர் தூரத்திற்கு தேங்காய் நார்கள் போடப்பட்டு இருபுறங்களில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு கேலரிகளும் அமைக்கப்பட்டிருந்தது. முதன்முதலாக கோவில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டது. இந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டது. எந்தெந்த காளைகள் அவிழ்த்துவிடப்படுகிறது என்பதை அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.

பரிசுப் பொருட்கள்...

வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்து திமிலை பிடித்தபடியே அடக்க முயன்றனர். சில காளைகள் பிடிபட்டது. சில காளைகள் மாடுபிடு வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்றது. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு மோட்டார் சைக்கிள், டி.வி., கட்டில், பீரோ, செல்போன், அண்டா, குத்துவிளக்கு, தங்ககாசுகள், வெள்ளிகாசுகள், கடிகாரம், பேக்குகள், சேர்கள், நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு மாடுபிடி வீரர்களுக்கு பரிசு மழை பொலிந்தது. அதே போல் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மொத்தத்தில் மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் பரிசுகளை அள்ளிசென்றனர்.

பலத்த பாதுகாப்பு...

இந்த ஜல்லிக்கட்டில் சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, கம்பம், தேனி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்பட்டது. இவைகளில் 600 க்கும் கீழான காளைகள் மட்டுமே வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டது. இதே போல் மாடுபிடி வீரர்கள் 1241 பேர் பரிசோதனைக்கு  பின்னர் அனுமதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு 150 பேர் என கணக்கிட்டு மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். இவர்களில் 10 த்திற்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்பட்டது. 2000 த்திற்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட போலீஸ் எஸ்.பி.மணிவண்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஒரு மணி நேரம் கால நீட்டிப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காலை முதலே வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை இளைஞர்கள் துள்ளிக் குதித்து அடக்கினர். பங்குபெற்ற 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு களம் இறக்கப்பட்டனர்.சட்ட விதிகளுக்கு உட்பட்டு காளைகளின் திமிலை அடக்கி காளையர்கள் தங்க நாணயம், மோட்டார் சைக்கிள், சைக்கிள், பீரோ, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

ஆயிரம் காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் 600க்கும் குறைவான காளைகளே களத்தில் இறக்கி விடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்கான நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரித்து மாலை 5 மணி வரை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. விழாக்குழுவினர் விடுத்த கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் அனுமதி வழங்கினர். இதனை தொடர்ந்து இந்த கால நீட்டிப்பானது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து