முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராண்ட்ஹோம் அதிரடியால் பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது போட்டியிலும் நியூசி. வெற்றி

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

வெலிங்டன் : கிராண்ட்ஹோம் அதிரடியால் பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று 4-0 என முன்னிலையில் உள்ளது.

பாக். பேட்டிங்...

நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து தொடரை வென்றிருந்த நிலையில், நேற்று 4-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக பகர் சமான், பஹீம் அஷ்ரப் களம் இறங்கினார்கள். 1 ரன் எடுத்த நிலையில் பஹீம் அஷ்ரப் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஆசம் 3 ரன்னில் வெளியேறினார்.

சமான் - சோஹைல் ...

3-வது விக்கெட்டுக்கு பகர் சமான் உடன் ஹாரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் அடித்தனர். பகர் சமான் 54 ரன்னிலும், ஹாரிஸ் சோஹைல் 50 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த மொகமது ஹபீஷ் 81 ரன்னும், கேப்டன் சர்பிராஸ் அஹமது 51 ரன்னும் எடுக்க பாகிஸ்தான் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்டும், கேன் வில்லியம்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

நிதான ஆட்டம்...

பின்னர் 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மார்ட்டின் கப்தில் நிதானமாக விளையாட, கொலின் முன்றோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முன்றோ 42 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கப்தில் 31 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 3-வது வீரராக களமிறங்கிய கேன் வில்லியம்சன் 32 ரன்னிலும், அடுத்து வந்த ராஸ் டெய்லர் 1 ரன்னிலும், டாம் லாதம் 8 ரன்னிலும் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 35 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருந்தது.

கிராண்ட்ஹோம்...

கடைசி 90 பந்தில் 109 ரன்கள் தேவைப்பட்டது. 6-வது விக்கெட்டுக்கு நிக்கோல்ஸ் உடன் கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 40 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 74 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி 45.5 ஓவரிலேயே இலக்கை எட்டி ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிக்கோல்ஸ் 70 பந்தில் 52 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு துணைபுரிந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 4-0 என தொடரில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 19-ந்தேததி வெலிங்டனில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்யும் நோக்கத்தில் நியூசிலாந்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து