முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி - தொடரையும் இழந்தது

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

செஞ்சுரியன் : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி மூலம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தொடரை இழந்துள்ளது.

சுற்றுப்பயணம்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வந்தது. முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்க அணி 335 ரன்னும், இந்திய அணி 307 ரன்னும் எடுத்தன.

பும்ரா 3 விக்கெட்...

28 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில், நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் ( 80 ரன்கள்), டீன் எல்கர் (61 ரன்கள்) ஆகியோர் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஏனைய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.  91.3 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி  ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்திய அணிக்கு 287 ரன்களை வெற்றி இலக்காக தென்ஆப்பிரிக்க நிர்ணயித்தது.

287 ரன்கள் இலக்கு...

பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. எம்.விஜய் 9 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 4 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 4-ம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து திணறியது.

புஜாரா ரன் அவுட்

5 -ஆம் நாள் ஆட்டமான நேற்றைய ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் புஜாரா 17 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். பார்த்தீவ் படேல் 19 ரன்களில் வெளியேறினார். தோல்வியை தவிர்க்க போராடிய ரோகித் சர்மா 47 ரன்களில்  ஆட்டமிழந்தார். பின் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க  இந்திய அணி 50.2 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வென்றது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக நிகிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடரை இழந்தது

தென் ஆப்பிரிக்க அணியின்  இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து