முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிபுராவில் பிப். 18-ம் தேதி ஓட்டுப்பதிவு: நாகாலாந்து - மேகாலயாவில் பிப். 27-ல் சட்டசபை தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வியாழக்கிழமை, 18 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்தியாவின் வடகிழக்கு பகுதி மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

ஆலோசனை

மேகாலயா சட்டசபையின் ஆயுட் காலம் மார்ச்  6-ம் தேதியும், நாகாலாந்து சட்டசபையின் ஆயுட் காலம் மார்ச் 13-ம் தேதியும், திரிபுரா சட்டசபையின் ஆயுட் காலம் மார்ச் 14-ம் தேதியும் முடிவடைகிறது. இதையடுத்து இந்த 3 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் ஆய்வு நடத்தி வந்தது. அடுத்த மாதம் (பிப்ரவரி) எந்தெந்த தேதிகளில் ஓட்டுப்பதிவை வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி தேர்தல் ஆணைய அதிகாரிகள் அந்த 3 மாநிலங்களுக்கும் சென்று ஆலோசனை நடத்தினர். அதன் பேரில் இந்த 3 மாநில சட்டசபை தேர்தல் தேதியை கடந்த வாரமே வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது. அந்த 3 மாநில தேர்தல் தேதி அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி நேற்று வெளியிட்டார்.

தேர்தல் விதி அமல்

திரிபுராவில் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்தார். மார்ச் மாதம் 3-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு 3 மாநில தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

திரிபுராவில் வேட்புமனு தாக்கல் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 31ம் தேதியாகும். பிப்ரவரி 1ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 3ம் தேதி கடைசி நாளாகும். நாகலாந்து, மேகாலயா இரு மாநிலங்களிலும் வருகிற 31ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. அடுத்த மாதம் 7ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 12ம் தேதி கடைசி நாளாகும்.

கடும் போட்டி...

தேர்தல் நடக்கவுள்ள மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து செல்வாக்குடன் திகழ்கிறது. சுமார் 20 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்றுவது என்பது பா.ஜ.க.வுக்கு கடும் சவாலாக இருக்கும். 


திரிபுரா மாநிலம்

தேர்தல் நடக்கும் நாள் - பிப். 18.

வேட்புமனு தாக்கல் -  ஜன. 24.

மனு தாக்கல் கடைசி நாள்  - ஜன. 31.

மனுக்கள் மீது பரிசீலனை  - பிப். 1.

மனுக்கள் வாபஸ் கடைசி நாள் - பிப். 3.

ஓட்டு எண்ணிக்கை - மார்ச்  3.

மேகாலயா - நாகாலாந்து மாநிலங்கள்

தேர்தல் நடக்கும் நாள் - பிப். 27.

வேட்புமனு தாக்கல் -  ஜன. 31.

மனு தாக்கல் கடைசி நாள்  - பிப். 7.

மனுக்கள் மீது பரிசீலனை  - பிப். 8.

மனுக்கள் வாபஸ் கடைசி நாள் - பிப். 12.

ஓட்டு எண்ணிக்கை - மார்ச் 3.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து