முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்மால் முடியும் என்ற எண்ணம் இருந்தால் வாழ்க்கையில் எதனையும் சாதித்து விடலாம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      தூத்துக்குடி
Image Unavailable

 நம்மால் முடியும் என்ற எண்ணம் மனதில் இருந்தால் வாழ்க்கையில் எதனையும் எளிதில் சாதித்து விடலாம்’’ என்று ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொங்காராயகுறிச்சி கிளை சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவ-மாணவியர்களுக்கான ‘’சாதித்துக் காட்டுவோம்’’  என்ற தேர்வு வழிகாட்டி முகாம் கொங்கராயகுரிச்சி ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சாதித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி

 முகாமிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அஸாருதீன், பொருளாளர் சேக்முகம்மதுஅலி, துணைத்தலைவர் தமீம், துணைச்செயலாளர்கள் சிக்கந்தர், நாஸர், இமாம்பரீது, மருத்துவஅணி செயலாளர் ரஷீத்காமில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் ஷமீம் வரவேற்றார். முகாமினை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,  ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகள் தங்களைப்போன்று கஷ்டப்படக்கூடாது படித்து சமூகத்தில் தலைசிறந்தவர்களாக வரவேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்காகவே தங்களது பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர். ஒவ்வொரு பிள்ளைகளும் தமது பெற்றோர்களின் கஷ்டத்தை உணர்ந்தும், அவர்களது எண்ணத்தை நிறைவேற்றிடவேண்டும் என்பதையும் மனதில் கொண்டும் நன்றாக படித்திடவேண்டும். நான் படித்த காலத்தில் எல்லாம் இதுபோன்ற தேர்வு வழிகாட்டும் முகாம்களோ இல்லை வழிகாட்டுவதற்கோ யாரும் இல்லை. ஆனால் இன்றுள்ள காலகட்டத்தில் வழிகாட்டுவதற்கு சமூகத்தில் கல்வியாளர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இதனை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கான பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணித்திடவேண்டும். நாம் தேர்வு செய்யும் பாதைக்கு ஏற்ப நமது பயணம் அமைந்திடும் என்பதனை உணர்ந்திடவேண்டும். பாடங்களை புரிந்து படிப்பதுடன், பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபெறவேண்டும். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்தும், சத்தான உணவுகளை சாப்பிட்டும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் எவ்வளவு நேரம் படிக்கவேண்டும், எந்தஎந்த பாடங்களை படிக்கவேண்டும் என்று திட்டமிட்டு அதற்கேற்ப பாடங்களை படித்திடவேண்டும்.  பொதுத்தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் தான் நமது வருங்கால வாழ்வை நிர்ணயிக்கிறது என்பதை மாணவர்கள் உணர்ந்து கவனமாக கருத்துடன் படித்திடவேண்டும். படித்தால் மட்டும் போதாது இதுபோன்ற வழிகாட்டும் முகாம்களில் கலந்துகொண்டு தேர்வுகளை எப்படி பயமின்றி, தன்னம்பிக்கையுடன் எழுதலாம் என்பதனையும் மாணவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். பொதுவாக மாணவ, மாணவியர்கள் பொதுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகளை எழுத செல்லும்போது மனதைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செல்லவேண்டும். வினாத்தாள் எப்படி இருக்குமோ? என்ற அச்சம் மனதில் ஒருபோதும் வரவே கூடாது. ‘’நம்மால் முடியும் என்ற எண்ணம் மனதில் இருந்தால் வாழ்க்கையில் எதனையும் எளிதில் சாதித்துவிடலாம்’’ என்பதை மாணவ, மாணவியர்களான நீங்கள் மனதில் நிலைநிறுத்திக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்றார். முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு, கல்வியாளர்கள் உமர்பாரூக், அன்சார்அலி ஆகியோர் தேர்வுகளை எழுதும் வழிமுறைகள் குறித்து பாடத்திட்டங்களுடன் விளக்கம் அளித்தனர். இதில், மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளையும் சேர்ந்த 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் திரளாக பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் தேர்வுக்கான பாடத்திட்டங்களின் கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை கொங்கராயகுறிச்சி கிளை செயலாளர் மீரான், பொருளாளர் மன்சூர், துணைத்தலைவர் இஸ்மாயில், துணைச்செயலாளர் கலீல், மாணவரணி செயலாளர் அபுபக்கர் சித்தீக் மற்றும் நெல்லைஜங்சன் கிளை தலைவர் பீர்முஜிப் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில், மாணவரணி செயலாளர் ஷமீம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து