முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.5.91 கோடியில் தாலிக்கு 8 கிராம் தங்கம் - திருமண நிதி உதவி அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

மதுரை, -மதுரையில்  927 பெண்களுக்கு ரூ.5.91 கோடி மதிப்பீட்டில் 8 கிராம் தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதி உதவிகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று வழங்கினார்.
மதுரை மாவட்டம், சம்மட்டிபுரம் கே.என்.பி.எம். பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளியில் சமூகப்பாதுகாப்புத்துறையின் மூலம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் மாவட்ட  கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர்   செல்லூர் கே.ராஜூ பயனாளிகளுக்கு நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-
 மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்டார்.  அவர் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமியின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வருகிறது.  தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் எந்தவொரு கஷ்டத்திற்கும் ஆளாக கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.பல்வேறு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது.  பெண்களுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதமாக தனியார் மற்றும் அரசு துறைகளில் வேலை செய்யும் பெண்களுக்கென அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தினை வருகின்ற 24.01.2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர்  துவக்கி வைக்க உள்ளார்.  இத்திட்டத்தின் மூலம் ஊரகம் மற்றும் நகர்ப்பகுதிகளில் பல்வேறு துறைகளில் வேலை புரியும் பெண்களுக்கு வாகனம் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25,000 மானியமாக வழங்கப்படும். 
மேலும் 1,95,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.  பள்ளியில் பயிலும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களான இலவச பாடப்புத்தகத்திலிருந்து தொடங்கி முதியோர் உதவித்தொகை வரை சிறப்பாக வழங்கி இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.  தமிழக அரசு விவசாயப் பெருங்குடி மக்களின் நலனிற்காக மானியத்துடன் கூடிய பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதுவரை இத்திட்டத்தில் சமூகநலத்துறையின் மூலம் வழங்கப்பட்டு வந்த திருமண நிதியுதவியானது பயனாளிகளுக்கு காசோலையாகவே வழங்கப்பட்டது. தற்பொழுது இத்தொகையானது பயனாளிகளின் நலன் கருதி அவர்களது வங்கி கணக்கில் இ.சி.எஸ் மூலம் வரவு வைக்கப்படும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  எனவே தமிழக மக்கள் அனைவரும் அரசால் அறிவிக்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.அனீஷ்சேகர், மாவட்ட சமூகநல அலுவலர் பெ.சாந்தி, மகளிர் திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பானுமதி, பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளி தலைவர் எம்.கனகசபாபதி (மாவட்ட நீதிபதி – ஓய்வு), பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளி செயலர் முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து