முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் தேசிய தொழில்முனைவோர் வாரவிழா கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் மாவட்ட தொழில்மையத்தின் சார்பில் தேசிய தொழில்முனைவோர் வாரவிழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில்மையம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் தேசிய தொழில்முனைவோர் வாரவிழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை சுயமாக தொழில் துவங்கி சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில் மாவட்ட தொழில்மையத்தின் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்குவதற்காக புதிய தொழில்முனைவோர் திட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் வேளாண்மை மற்றும் மீன்பிடித் தொழிலை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். 
 இதுதவிர கமுதி அருகே மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் அதானி குழுமத்தின் மூலம் ரூ.4500 கோடி மதிப்பில் 650 மெகாவாட் அளவு மின்உற்பத்தி  செய்திடும் வகையில் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியினை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மத்திய அரசு விஷன் 2022  திட்டத்தின் கீழ் இந்தியாவில்  உள்ள அனைத்து மாநிலங்களிலும் கணக்கிட்டு வளர்ந்து வரும் மாவட்டங்களாக 115 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  அந்தந்த மாவட்டங்களில் மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தபடவுள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டங்களைப் பொறுத்த வரையில் கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை உற்பத்தி, சுகாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. தனிமனித பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதன் மூலம் இத்தகைய வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட முடியும். 
 இக்கூட்டத்தில் புதிதாக தொழில் முனைவோர்களுக்கு வேண்டிய பண்புகள், சந்தை நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர்களுடனான உறவுமுறை, சந்தைப்படுத்துதல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான வங்கி திட்டங்கள் மற்றும் வணிக நெறிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்படுகிறது.  இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் இதனை முழுமையாக கேட்டறிந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி மாவட்டத்தின் தொழில்வளர்ச்சிக்கு உறுதுணை புரிய வேண்டும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ப.மாரியம்மாள், தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மதியழகன், மாவட்ட தாட்கோ மேலாளர் கே.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் ஏ.குணசேகரன், கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன மேலாளர் ஆர்.சியாமளாநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (பொ) எஸ்.சதீஷ்குமார், பாண்டியன் கிராம வங்கி மேலாளர் குசலவன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து